மறைக்கப்பட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கை? – சுகாதார அமைச்சகம் விளக்கம்!

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை ஓய்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2 அலைகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.11 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அரசு வெளியிட்டுள்ள இந்த எண்ணிக்கையை விட அதிக அளவில் நாட்டில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

அதாவது சிவில் பதிவு முறை மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (எச்.எம்.ஐ.எஸ்.) தரவுகளின் ஒப்பீட்டு அடிப்படையில், அதிக இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.

ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்து உள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் அதிக கொரோனா மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் அடிப்படையிலான செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா மரணங்கள் தொடர்பாக தவறான அனுமானங்களை ஏற்படுத்துவதற்காக சிவில் பதிவு முறை மற்றும் எச்.எம்.ஐ.எஸ். ஒப்பிடப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கைகள் எத்தகைய ஆதாரமும் இல்லாமல் ஊடகங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை ஆகும்.

எச்.எம்.ஐ.எஸ்-ல் வெளியிடப்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கையில் பிற தகவல்கள் எதுவும் இல்லை. எனவே அந்த மரணங்களும் கொரோனா மரணங்களாக கருதப்பட வேண்டும் என அந்த ஊடக செய்திகள் கூறுகின்றன. அந்தவகையில் 2½ லட்சத்துக்கு மேற்பட்ட மரணங்களுக்கு காரணம் தெரியவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

அனுபவ தரவுகளின் அடிப்படையில் இருப்பதை விட எந்த அடிப்படையும் இல்லாமல் கொரோனாவுக்கு எந்தவொரு மரணத்தையும் காரணம் கூறுவது தவறானது. மேலும் இதுபோன்ற அனுமானங்கள் வெறும் கற்பனையில் உருவானவை மட்டுமே.

கொரோனா தரவுகளை நிர்வகிப்பதில் மத்திய அரசு மிகவும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கொரோனா மரணங்களை பதிவு செய்வதற்கு வலுவான அமைப்பு ஒன்றும் ஏற்கனவே உள்ளது.

இந்த குறிப்பிட்ட அமைப்பில் உள்ள தரவை தொடர்ச்சியான அடிப்படையில் புதுப்பிக்கும் பொறுப்பும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இறப்பு எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு வழங்கியிருக்கும் ஐ.சி.டி.10 குறியீடுகளின்படி அனைத்து இறப்புகளையும் சரியாக பதிவு செய்வதற்காக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) சரியான வழிகாட்டுதலையும் வழங்கியிருக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி இறப்பு எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யுமாறு தகவல் தொடர்புகள், காணொலி காட்சிகள் மற்றும் மத்தியக்குழுக்களை மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளன. இதைத்தவிர இந்த விவகாரத்தில் மத்திய சுகாதார அமைச்சகமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கொரோனா போன்ற கடுமையான மற்றும் நீடித்த பொது சுகாதார நெருக்கடியின்போது பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் எப்போதும் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் இறப்புகள் தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் தொற்று முடிவுக்கு வந்தபிறகு, நம்பகமான துறையில் இருந்து தரவுகள் கிடைத்தபின்னரே நடைபெற்று இருக்கின்றன.

இத்தகைய ஆய்வுகளுக்கான வழிமுறைகள் நன்கு நிறுவப்பட்டு இருக்கின்றன. அத்துடன் இறப்புகளை கணக்கிடுவதற்கான தரவு ஆதாரங்கள் சரியான அனுமானங்களாக வரையறுக்கப்படுகின்றன.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!