வவுனியாவுக்கு தடுப்பூசி தாமதமாவது ஏன்? மக்கள் கேள்வி

கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் அண்மையில் 1000 தடுப்பூசிகள் சில வைத்தியர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரால் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் சுகாதாரத் துறையினர், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் என குறைந்தளவிலானோருக்கே வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏனையோருக்குத் தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்தும் காலதாமதம் நிலவி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையில் கொழும்பு போன்ற பகுதிகளில் 97 வீதமான ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் வவுனியாவில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை. வவுனியா ஆசிரியர்கள் ஓரம்கட்டப்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், மக்கள் குற்றம்சாட்டும் அதேவேளை இவ்வாறான விடயங்களுக்கு வவுனியாவில் சுகாதார அதிகாரிகள் எவரும் பதில் வழங்காமை சந்தேகத்தை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் பொறுப்பான சுகாதார அதிகாரிகள் எவரும் கருத்து கூறாமை ஏன் என்ற கேள்வியை எழுப்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே கோவிட் தடுப்பூசிகளைப் பெறச் சுகாதார தரப்பினர் தகவல்களை வழங்குவது மாத்திரமன்றி வவுனியா மாவட்டத்திற்குத் தடுப்பூசியின் முக்கியத்துவம் தொடர்பிலும் கோவிட் தடுப்பு செயலணிக்கு விரிவாக எடுத்துக்கூறி காரியத்தைச் சாதிக்க முனைப்புக் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன், வாய் மூடி மௌனியாக இருப்பதால் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!