சிற்றாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இன்று (17) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மக்களின் வணக்கத்திற்குரிய சொரூபங்கள், சிற்றாலயங்கள் இனம் தெரியாத நபர்களினால் இடிப்பது மற்றும் அடித்துச் சேதப்படுத்தும் சம்பவங்களை அவதானித்து வருகின்றேன்.

இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழும் கத்தோலிக்க மக்களுக்கும், இந்து மக்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் செயலாக நான் கருதுகின்றேன்.

குறித்த செயற்பாடு அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான நபர்களின் செயல் என்பதை நான் நன்கு அறிகின்றேன். எனவே காவல்துறையினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அத்துடன் விரைவாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இனிமேல் இது போன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது. துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிற்றாலயங்கள் மீதான தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!