மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு

மும்பை அருகே தண்டவாளத்தில் தவறி விழுந்து, எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிக்கிய முதியவர் என்ஜின் டிரைவர் சாதுர்யத்தால் மயிரிழையில் உயிர்தப்பினார்.

மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு நேற்று மதியம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ரெயில் மதியம் 12.45 மணியளவில் கல்யாண் ரெயில் நிலையம் சென்றது. பின்னா் அங்கு இருந்து புறப்பட்டது.

இந்தநிலையில் ஹரி சங்கர்(வயது70) என்ற முதியவர் ரெயில் புறப்பட்டதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.

முதியவர் தண்டவாளத்தில் விழுந்ததை அங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் சந்தோஷ் குமார் கவனித்தார். உடனடியாக அவர், ரெயில் என்ஜின் டிரைவர்களை நோக்கி சத்தம் போட்டார். இதையடுத்து சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அவசர பிரேக்கை அழுத்தினார். இதனால் மயிரிழையில் முதியவர் ரெயில் சக்கரத்தில் சிக்காமல் உயிர் பிழைத்தார்.

இதையடுத்து அங்கு ஓடிச்சென்ற ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்திற்கும், ரெயில் என்ஜினுக்கும் இடையே விழுந்து கிடந்த முதியவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த திக், திக் காட்சிகளால் நேற்று கல்யாண் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே முதியவர், என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்ட மத்திய ரெயில்வே, பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டாம் என எச்சரித்து உள்ளது.

இதேபோல மத்திய ரெயில்வே பொது மேலாளர் சிறப்பாக பணியாற்றி முதியவரின் உயிரை காப்பாற்றிய என்ஜின் டிரைவர்கள் எஸ்.கே.பிரதான், ரவிசங்கர் மற்றும் ஊழியர் சந்தோஷ் குமார் ஆகியோருக்கு சன்மானம் அறிவித்து உள்ளார். இதேபோல பல்வேறு தரப்பினர் என்ஜின் டிரைவர்களை பாராட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!