காவிரிக்காக தி.மு.க. போராடுவது வேடிக்கை – சீமான் பேட்டி


காரைக்காலில் தனியார் துறை முகத்தில் நிலக்கரி கையகப்படுத்துவதால் நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்து மக்கள் பல்வேறு நோய்களுக்கும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்கக் கோரி நாகூர் புதிய பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக கடல்வழி போராட்டம் நடத்துவோம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் எங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதைப்பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படுவதே இல்லை. மக்களுக்காகத் தான் அரசு என்பதை புரிந்து கொள்ளவுமில்லை.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘‘காவிரி விவகாரத்திற்காக ஸ்டாலின் நடைபயணம் போவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால் மேலாண்மை வாரியம் அமைந்துவிடுமா. காவிரி பிரச்சினையை நாம் பிறந்ததில் இருந்ததே பார்த்து வருகிறோம். இப்போது பா.ஜ.க. அரசு மத்தியில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது.

அன்றும் இதே காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை இருந்தது. அப்போது என்ன தீர்வு எட்டப்பட்டது. நாங்கள் போராடுகிறோம் என்றால் அதிகாரமற்றவர்கள் என்பதால் போராடுகிறோம்.

அதிகாரத்திற்கு போனதே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணத்தான். அப்போது தீர்வு காணாமல் இப்போது நடைபயணம், போராட்டம், மறியல் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு பெற்றுத் தரவில்லை என்பதால் தான் மாணவர்களும், இயக்கத்தினரும் போராட்ட களத்தில் இறங்கினர்.

அவர்களாக போராடி பெற்றுக் கொள்ளட்டுமே என்று கூட அரசு விடாமல் வழக்கு போடுகிறது. மெரினா கடற்கரையில் போராட தடை விதிக்கிறது.

மெரினாவில் போராட அனுமதி கொடுத்து பாருங்கள் உலகமே திரும்பிப் பார்க்கும் போராட்டத்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #Seeman #DMK