நிதி யோசனைக்கு வியாகியானம் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நாடாளுமன்றில் கடந்த 20ம் திகதிமுன்வைக்கப்பட்டுள்ள “நிதி” என்ற யோசனை தொடர்பில் சட்ட வியாகியானம் கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த யோசனையின் பல உட்பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றும் உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரரான எரான் விக்ரமரத்ன கோரியுள்ளார்

யோசனையின் 2, 3, 4, 5 மற்றும் 6 உட்பிரிவுகள் எந்தவொரு வரி, அபராதம் அல்லது வட்டி செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து வரி மன்னிப்பை வலியுறுத்துகிறது. அல்லது 6 வது பிரிவில், எந்தவொரு விசாரணை அல்லது வழக்குகளிலிருந்து விலக்களிப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

வருமானம் அல்லது சொத்து ஆகியவற்றை வெளியிடாத எந்தவொருவருக்கும் குறித்த யோசனை மூலம் இதுபோன்ற பொது மன்னிப்பு கிடைக்க்கும் என்று மனுதாரர் சுட்டிக்காட்யுள்ளார்.

அத்துடன் வெளிப்படுத்தப்பட்ட தொகையில் 1% ‘தன்னார்வ வெளிப்பாட்டிற்கான வரி’ என வசூலிக்கப்பட வேண்டிய தொகை, ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் அடிப்படையில் வரி செலுத்திவோரின் வரிப் பொறுப்பை விட மிகக் குறைவு என்று விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரி மன்னிப்பு என்பது, வருவாய் மீதான மோசடியை நியாயப்படுத்தும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். இது, ஏற்கனவே வரி செலுத்திய மற்றும் வரி செலுத்துவோருக்கு பாரபட்சமானது.

கூறப்பட்ட உட்பிரிவுகள் தன்னிச்சையானவை, பகுத்தறிவற்றவை, முற்றிலும் நியாயமற்றவை, அரசியல் அமைப்புக்கு முரணானவை, பொது அறக்கட்டளை கோட்பாடு மற்றும் மக்களின் இறையாண்மைக்கு எதிரானவை என்று மனுதாரர் தமது மனுவில் கூறியுள்ளார்.

அதேநேரம் இந்த யோசனை, வரி ஏய்ப்பை ஊக்குவிக்கும் என்றும், இதனால் இலங்கைக்கு நன்மை கிடைக்காது என்றும் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!