வெளிமாவட்ட பக்தர்களுக்க அனுமதியில்லை!

மன்னார்- மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இம்முறை அனுமதி இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் அதன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில், மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் மற்றும் சுகாதார துறையினரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டு, மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அத்துடன், உரிய திணைக்களங்களின் உதவியோடு, மடு திருத்தலத்துக்கு வரும் மக்களின் தேவைகள் குறித்து, குறிப்பாக நீர், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து தொடர்பில் ஆராயப்பட்டு, தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேலும், அதிகமான திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, சுகாதார செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அடுத்த கூட்டங்களில் தீர்மானங்களை முன்வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!