இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டது ஹிஷாலினியின் சடலம்

டயகம மூன்றாம் பிரிவு பகுதியில் புதைக்கப்பட்ட ஹிஷாலினியின் சடலம் இன்று காலை 8.30 மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைக்கமைய விசேட வைத்திய குழுவினர்கள் முன்னிலையில் சிறுமி ஹிஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பான முறையில் அனுப்புமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் ஹிஷாலினியின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறுமியின் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவும், புதைக்கப்பட்ட மகளின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு ஒன்றினை சமர்ப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!