ஆப்கானிஸ்தானில் ஐ.நா அலுவலகத்தை சூறையாடிய தாலிபான்கள்: தொடரும் வெறிச்செயல்!

ஐ.நாவின் அலுவலகத்தை தலிபான் தீவிரவாதிகள் தாக்கியதில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானிய படைகளுக்கு உதவி செய்த அமெரிக்காவின் நேட்டோ படைகள் அங்கிருந்து வெளியேறி வருகிறது. இதனால் பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து ஆப்கானை கைப்பற்றி வருகின்றனர்.

அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடுகள் தற்போது வரை எட்டப்படாத நிலையில், அமெரிக்கா தொடர்ந்து பிரச்சனையை பேசி தீர்க்க வலியுறுத்தியுள்ளது. ஆனால் தாலிபான்களோ ஆப்கானை முழுவதுமாக கைப்பற்ற சீனாவின் உதவியை நாடி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை நேரில் சென்று சந்தித்துள்ளது.

ஆப்கான் அரசு படைகளுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட உதவிகளை செய்து வரும் அமெரிக்கா, வான்வழி தாக்குதலை மேற்கொண்டு பயங்கரவாதிகளை ஒழித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படை விலகல் சில நாட்கள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு வன்முறை சம்பவங்களும் அதிகளவு நடைபெற்று வருவதால் அமெரிக்கா தனது படைகளை மொத்தமாக வாபஸ் வாங்குவதில் தயக்கம் காண்பித்து வருவதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள ஹெராட் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை தலிபான்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் ஐ.நா அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!