புழல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்ற இயக்குனர் கெளதமன்

தமிழகத்தின் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த பிரபல இயக்குனர் கெளதமன் உட்பட ஆறுபேர் தங்களது உண்ணாவிரத போரட்டத்தை வாபஸ் பெற்றனர். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு கடந்த வியாழக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தை இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினர். இதனால் முக்கிய பாலமான அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இருந்த போதிலும் கௌதமன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை பொலிசார் கைது செய்தனர். அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோருக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.இதனால் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று கௌதமன் உள்ளிட்ட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

Tags: