அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – ஜப்பான் வலியுறுத்தல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும், சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும், சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 12ஆம் நாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை ரோக்கியோவில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

ஜப்பானியப் பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோக்கியோவில் இருந்து புறப்பட்ட நிலையில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடன் கடல்சார் ஒத்துழைப்பை ஜப்பான் வலுப்படுத்த வேண்டும் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சிறிலங்காவில் கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் இரண்டு ரோந்துப் படகுகளை ஜப்பான் வழங்கவுள்ளது.

ஜப்பான்- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் ஊடாக, ஏனைய உதவிகள், மேலதிக பாதுகாப்பு பரிமாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும்.

ஜப்பான்- இந்திய கடலோரக் காவல்படைகள் இணைந்து நடத்தவுள்ள அடுத்த கூட்டுப் பயிற்சியில், சிறிலங்காவை பார்வையாளராகப் பங்கேற்றுமாறு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. என்றும் இந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: , ,