மோடியின் கொழும்பு பயணத்தின் போது கூட்டு அபிவிருத்தி உடன்பாடு செய்ய தயாராகும் சிறிலங்கா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, கூட்டு அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ள சிறிலங்கா சீனாவின் பிடியில் இருந்து விடுபடுவது கடினமானது என்பதால், இதனைச் சமநிலைப்படுத்தும் வகையில், திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா முன்வந்துள்ளது.

இந்தியாவுடன் கூட்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைக் கையெழுத்திட சிறிலங்கா தயாராக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணத்தின் போது, இந்த உடன்பாடு கையெழுத்திடப்படக் கூடும்.

அதேவேளை, இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பதை, அதிகாரபூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பொருளாதார ரீதியான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தோன்றாததால், இந்தியா கடந்த காலங்களில் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை.

அதேவேளை, தாம் ஆட்சியில் இருந்த போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடமே முதலில் கேட்டதாகவும், இந்தியா மறுப்புத் தெரிவித்த பின்னரே சீனாவிடம் அதனை ஒப்படைத்ததாகவும், மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்ற பயத்தினால் தான் இந்தியா அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மறுத்திருந்தது.

இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள மறுத்ததால், அங்கு சீனாவின் கடுமையான தலையீடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சிறப்பு பொருளாதார வலயம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு சீனாவுக்கு சிறிலங்கா அனுமதி அளித்துள்ளது.

வணிக ரீதியான அம்சங்களை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், திருகோணமலை துறைமுகத்தை கூட்டாக இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா எடுத்துள்ள முடிவு நல்லதொரு அடையாளமாக பார்க்கப்படுவதாக இந்திய அரசு மற்றும் சுதந்திரமான மூலோபாய விவகார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மூலோபாய சிந்தனையாளரான, பிரமா செல்லானி, சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டிலான திட்டத்தின் மூலம், இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்குச் சொந்தமான, சீனாவினால் நடத்தப்படும் பகுதி ஒன்று உருவாகும்.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்யும் திட்டமான, சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிர்ச்சமனிலையான செயற்பாடாக இருக்க முடியாது.

ஆனால், கொழும்பு தாழ்ந்து போவதற்கு எதிரான செல்வாக்கை கட்டியெழுப்புவதற்கு உதவுவதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Tags: , ,