அதிகரிக்கும் கொரோனா: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

2019 – ஆம் ஆண்டு முதல் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்றுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கு அடிப்படை காரணம் மனிதன்தான். மனிதன் சுற்றுச்சூழல் மீது நேரடியாகவோ, மறைமுகவோ நடத்திய வன்முறைகளின் விளைவுதான் இப்படியான பெருந்தொற்று என்பதில் மாற்றமில்லை.

மாற்றம் ஒன்று மட்டுமே இந்த உலகில் மாற்றமில்லாதது. மாற்றங்களால் நிறைந்த வாழ்க்கைப் பயணதில், கரோனா பெருந்தொற்றானது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பலவித மாற்றங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கரோனா தொற்றால் ஏற்பட்ட நேரடி பாதிப்பு என்பது ஒருபக்கம் இருந்தாலும், தனிமனிதர் ஒவ்வொருவரது பழக்கவழக்கங்களிலும் கரோனா மறைமுகமாக பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றங்களில் நல்லவை தீயவை என இரண்டுமே நிகழ்ந்துள்ளது.

அதாவது ஆன்லைன் மூலமாகவே கற்க வேண்டிய நிலை, இதனால் பலவற்றை புரிந்து கொள்ள முடியாத நிலை, உணவு விடுதிகள்கள் பகுதியாக மூடப்பட்டு பார்சலுக்கு மட்டுமே அனுமதி, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் உணவு விடுதிகளில் உணவு சாப்பிட முடியாத நிலை, சமுதாயத்தில் ஒன்று கூடி பேசமுடியாத நிலை, திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமால் போனாது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டி நிலை, மன உளைச்சல், தற்கொலை எண்ணங்கள் தலைத்தூக்கியதுடன் தற்கொலைகள் அதிகரித்தது என்று கூட கூறலாம்.

அதாவது ஒரு தொற்று நோய் பரவ மூன்று விஷங்கள் முக்கியம். முதலாவது நோய்க் காரணியான கிருமி, அடுத்து கிருமியை வளர்த்து பரப்பும் உயிரினம், மூன்றாவது இதற்கு தோதான, தேவையான சூழல். கரோனா பெருந்தொற்றை பொருத்தவரை நோய்க்காரணியாக இருப்பது கரோனா வைரஸ். கிருமியை வளர்த்துப் பரப்பும் உயிரினமாக இருப்பது மனிதர்கள். தேவையான சூழலாக இருப்பது எதிர்ப்பு சக்தியற்ற தொற்றுப்பரவல் குறித்த விழிப்புணர்வற்ற மனிதர்கள் கூட்டமாக, குழுவாக கூடுவது, குளிர் காலம் போன்றவை உகந்த சூழலாக உள்ளது.

முதல் அலையில் வைரஸ் எந்த உருமாற்றமும் அடையாமல் மனிதர்களைத் தாக்கியது. மனிதர்களிடையேயும் இந்த தொற்றுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி இருந்திருக்கவில்லை. அதனால் நாட்டில் தொற்று பரவல் 2020 இல் வெயில் காலத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் உச்சத்தை அடைந்தது.

இரண்டாவது அலை தாக்கத்தின் போது நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு மட்டுமே தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருந்தது. அதனால் கரோனா வைரஸ் ஆல்ஃபா, பீட்டா, காமா, காமா என தன்னகத்தே பல உருமாறியதுடன் முதல் அலையை விட வேகமாகத் தொற்றியதுடன் அதன் வீரியம் அதிகமாக வெளிப்பட்டது. இதனுடைய உச்சம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்ந்தது. வெளியில் காலத்தில் உச்சம் அடைந்திருந்தாவும் தொற்றின் வேகமும், வீரியமும் அதிகமாக இருந்ததால் பாதிப்பும், பலியும் அதிகமாக இருந்தது.

தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு ஒரு பேராயுதமாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2020 ஜனவரி முதல் கிடைத்திருந்தாலும் தடுப்பூசி மூலம் போதுமான எதிர்ப்பு சக்தி அளவுகளை அடைவதற்கு முன்பாகவே இரண்டாம் அலை வந்து விட்டது. ஆயினும் தடுப்பூசியின் பயனால் பல மருத்துவ முன்கள பணியாளர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூத்த தலைமுறையினர் பலரின் உயிர்களும் காப்பாற்றப்பட்டது.

தொற்றுக்கு எதிரான பேராயுதமான தடுப்பூசி இதுவரை நாட்டின் மக்கள்தொகையில் 20 சதவீகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 8 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியர்களில் 60-70 சதவிகிதம் பேருக்கு அதாவது கிட்டத்தட்ட மூன்று பேரில் இரண்டு பேருக்கு கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது நல்ல செய்தியாக இருந்தாலும் செய்தியை முழுமையாக அலசாமல் நமக்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

அதாவது தொற்று எதிராக எதிர்ப்பு சக்தியை அளவிடும் அனைத்து ஆய்வுகளையும் ஓரளவுக்கு மட்டுமே நம்பிக்கை கொண்டு ஏற்க வேண்டும். காரணம் 138 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ள நாட்டில் வெறும் 28 ஆயிரம் பேருக்கு மட்டும் தொற்று எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்து முடிவை எட்டும் போது பல ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ஜூலை 2021 இறுதியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வில் 66.2 சதவிதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அளவானது மேற்கு மண்டல மாவட்டங்களான கோயம்புத்தூரில் 43 சதவிகிதம், திருப்பூரில் 46 சதவிகிதம் , ஈரோட்டில் 37 சதவிகிதமாக இருந்தும் அவை இரண்டாவது அலையில் எதிரொலிக்கவில்லை. அதாவது தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மேற்கண்ட மாவட்டங்களில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழியாக உள்ளதால் கோவைக்கு, அதிக அளவிலான தடுப்பூசிகள் வரவைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது அரசு.

இந்த நிலையில் ஒரு மாதத்துக்குள் கரோனா மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதால் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மூன்றாவது அலையை நாம் அடையும் போது கரோனா பெருந்தொற்றானது எத்தகைய உருமாற்றத்தோடு நம்மை அனுகும் என்பதை நாம் முடிவு செய்ய இயலாது.

மூன்றாம் அலையின் உச்சம் கார் மற்றும் குளிர்காலத்தில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அது தொற்று பரவலுக்கு சாதகமான சூழலாக இருக்கக்கூடும். மூன்றாவது அலையின் உச்சம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றின் வீரியமும், தீவிரமும் தொற்றின் உருமாற்றத்தைப் பொருத்தே அமையும்.

எவ்வாறாக இருப்பினும் நம்மிடையே நிலவும் எதிர்ப்பு சக்தி மற்றும் தொற்றுக்கு எதிரான பேராயுதமான தடுப்பூசி மூலம் கிடைத்துள்ள எதிர்ப்பு சக்தியை வைத்து கணித்தால் இரண்டாம் அலை பாதிப்புகளை விட, மூன்றாவது அலையின் பாதிப்பு சிறிது குறைவாக இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நோய்த்தொற்று மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறையும் தன்மை கொண்டதாக இருப்பதால் செப்டம்பர் மாத இறுதியில் தற்போது இருப்பதை விட எதிர்ப்பு சக்தியின் அளவுகள் குறைந்து இருப்பதற்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

எனவே, மூன்றாவது அலையை மட்டு(கட்டு)ப்படுத்த நம்மிடையே இருக்கும் ஆயுதங்களை, பேராயுதங்களை முழுமையாகவும், முறையாகவும், துரிதமாகவும் கடைபிடித்து செயல்படுத்தினால் மட்டுமே மூன்றாவது அலையின் தீவிரத்தை மட்டுப்படுத்த முடியும்.

கரோனா கற்றுக் கொடுத்த பாடத்தை, கரோனாவில் இருந்து கடந்து சென்ற பிறகு நாம் மறந்து போனால் மறுபடியும் இதுபோன்று பல்வேறு புதிய வைரஸ்கள் வரக்கூடிய சாத்தியங்களே அதிகம்.

மனித இனம் ஆரம்பித்த நாளிலிருந்து நோய்க்கிருமிகள் தோன்றிவிட்டன. மக்கள்தொகை பெருகுவது போல் நோய் உண்டாகும் வாய்ப்பும், நோயினை உண்டாக்கும் கிருமிகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் கரோனா பெருந்தொற்று போன்று ஆறு லட்சம் வைரஸ்கள் வருவதற்கான சாத்தியங்கள் இந்த பூமியில் உருவாகி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அசாதாரண சூழலில் இருந்து உலகம் பாதுகாக்கப்படவும், அடுத்த தலைமுறையை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து பாதுகாக்கவும், மனிதனை மையப்படுத்தாமல் சூழலையும் மையப்படுத்த வேண்டும்.

அதாவது இயற்கைக்கு இசைவான வாழ்வியலை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் சா்க்கரை, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றாத வாழ்வியல் நோய்களில் சிக்கிக்கொள்ளமால் இளம் தலைமுறையினரை காக்க முடியும். அப்போதுதான் பல்வேறு உருமாறிய வைரஸ்கள் பல்வேறு கால கட்டங்களில் உருவாகிக் கொண்டே இருக்கும் பெருந்தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதாவது நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து மக்கள் இந்த நோய் அச்சத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள உடலில் பித்தத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மரபுகள் சொல்லிக் கொடுத்த வாழ்வியலை, உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இஞ்சி, கரிசலாங்கண்ணி, கடுக்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கஷாயங்களை எடுத்துக் கொள்ளுதல், குளிர்ச்சியான உணவுப் பொருள்களைத் தவிர்த்தல், கூட்டங்களைத் தவிர்த்தல், கைவிட்டுள்ள முகக்கவசம் அணியும் பழக்கத்தை அனைவரும் மீண்டும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

உலகிலுள்ள கடைசி மனிதன் வரை அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போடப்படும்வரை கரோனா பெருந்தொற்று அபாயம் தொடரும் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். அதாவது பருவத்தே பயிர் செய் என்பது நாமெல்லாம் அறிந்த முதுமொழி.

அந்த தடுப்பூசிகளையும் தகுந்த பருவத்தில் போட்டால்தான் நாம் எதிர்பார்க்கும் நோய் எதிர்ப்புத் தன்மையும், பாதுகாப்பும் கிடைக்கும். எனவே தடுப்பூசியை அனைவரும் விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக 45 வயதை கடந்தவர்கள் விடுபடாமல் தடுப்பூசியை செலுத்துக்கொள்ளுதல்.

தேவையற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கொண்டு கழுவுதல், பணிபுரியும் இடங்களிலும் முகக்கவசத்தை தொடர்ந்து அணிந்து கொள்ளுதல், தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடித்தல், தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமலை புறக்கணிக்காமல் பரிசோதனை செய்துகொண்டு, விரைவாக சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவற்றை மக்களாகிய நாம் முறையாகக் கடைபிடித்து வந்தோம் என்றால் மூன்றாம் அலையில் சிக்காமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். அலட்சியம் தவிர்த்து கரோனாவை வெல்வோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!