அரசுக்கு மீண்டும் முட்டுக் கொடுக்கப் போகிறதா கூட்டமைப்பு?

கடந்த ரணில்-மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்திற்கும் ஆதரவு தெரிவிக்க முனைவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இரகசிய சந்திப்பொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைக் கையாள்வதற்கு அரசாங்கம் சார்பில் பசில் ராஜபக்சவை ஜனாதிபதி நியமித்திருப்பதாகவும் அவருடனேயே அந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பேச்சுவார்த்தை ஒன்று நடப்பதாக இருந்தால், அது புதிய அரசியல் சாசனம் பற்றிய பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

லங்கை என்பது சிங்கள பௌத்த நாடென்றும் அதனைப் பாதுகாத்து சிங்கள மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாகவும் ஜனாதிபதியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய சிங்கள பௌத்த கடும் தேசியவாதிகளும் ஆளும் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் எவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்தப்போகின்றது என்பது புரியாத ஒரு கேள்வி என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளியாக இருந்த அரசாங்கமே அவர்களை ஏமாற்றியிருக்கக்கூடிய சூழ்நிலையில், சிங்கள பௌத்தத்தைக் காப்பாற்றுவதற்காகவே வந்துள்ள புதிய அரசாங்கத்திடம் என்னவிதமான புதிய அரசியல் சாசனத்தை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் அதிபர் ஆசிரியர்கள், இஸ்லாமிய சகோதரர்கள், உள்ளிட்டோர் எத்தகைய விடயத்தையும் உள்நாட்டில் தீர்க்கமுடியாமல் ஐ.நாவை நோக்கி படையெடுக்கின்ற ஒரு நிலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். யதார்த்தங்கள் இவ்வாறிருக்க அரசுடன் மேற்கொள்ளப் போகின்ற பேச்சுவார்த்தை என்பது இலங்கை அரசாங்கத்தை மீண்டும் ஐ.நாவின் பிடியிலிருந்து பிணை எடுக்கும் முயற்சிபோல் தோன்றுகின்றது எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக் கட்சிகளும் இந்த முயற்சிகளின் ஆபத்தினைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கேட்டுக்கொள்கிறது என சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!