தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி விசாரித்து, விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தமனு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டடார். சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!