சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னமும் இந்த உடன்பாடுகள் குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இன்னமும் உடன்பாடுகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் நான் கையெழுத்திடமாட்டேன்.

எதிர்க்கட்சி அரசியல் சக்திகளும், ஒரு பகுதி ஊடகங்களும் தேசிய விவகாரங்கள் தொடர்பாக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு, திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விவகாரங்களில் ஊடகங்கள் அதீத கவனத்தை செலுத்துகின்றன.

முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட கொழும்பு துறைமுக நகர உடன்பாடு போன்று பாதகமான உடன்பாடுகள் செய்து கொள்ளப்படாது.

தற்போதைய அரசாங்கம் தான் அந்த உடன்பாட்டை திருத்தியமைத்தது, அந்த உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா அதிபர் பயணம் செய்யும் உலங்குவானூர்தி கூட கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக பறக்க முடியாது.

சீனாவுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்கும் வகையில் செய்து கொள்ளப்பட்டிருந்த உடன்பாட்டை புதிய அரசாங்கமே திருத்தியமைத்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,