சிறிலங்காவில் 95 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த நேர்காணல் ஆரம்பம்

சிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ‘புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு 95 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

விண்ணப்பித்த அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

நேற்றுத் தொடக்கம் இந்த நேர்காணல் இடம்பெற்று வருகிறது. நாளை வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும். பின்னர், மீண்டும் ஏப்ரல் 26ஆம் நாள் தொடக்கம், 28ஆம் நாள் வரை நேர்காணல்கள் நடத்தப்படும்.

நேர்காணல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் அனுமதி தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு, கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தற்போது. 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, 95 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Tags: ,