கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்: போலீசார் வழக்குப்பதிவு!

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவின் Saskatchewan மாகாணத்தில் உள்ள டிஸ்டேல் (Tisdale) நகர் சுமார் 3000 பேரை மக்கள் தொகையாக கொண்ட ஊராகும்.

இந்த நகரின் மையப்பகுதியில் இருக்கும் Dairy Queen எனும் உணவகத்தின் வாசலில், கடந்த ஜுலே 31-ஆம் திகதி மாலை 5 மணியளவில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தின் மருத்துவ விமான ஆம்புலன்சின் அதே வண்ணம் அந்த ஹெலிகாப்டருக்கும் பூசப்பட்டிருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.

ஆனால், அந்த ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பைலட், உணவகத்திற்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அந்த ஹெலிகாப்டர், அதிக போக்குவரத்து நிறைந்த பார்க்கிங் பகுதியில் தரையிறங்கியதால், இதன் விளைவாக, அப்பகுதி முழுவதும் தூசு மற்றும் குப்பைகள் பரவியது.

அந்த இடம் பல பள்ளிகள், நீர் நிலையம் மற்றும் பல முக்கிய அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ள பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் நடத்திய விசாரணையில், ஹெலிகாப்டரை இயக்கிய பெயர் குறிப்பிடாத 34 வயதான பைலட், ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் அதனை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார் செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அவரிடம் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான லைசன்ஸ் இருந்தாலும், பார்க்கிங் இல்லாத இடத்தில் அவர் அதனை இறக்கியதும், ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஒன்றும் அவசரத்தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!