காவி உடை, நீண்ட தாடியுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் முருகன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனப்படும், சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

வேலூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முருகனிடம் இருந்து, கைபேசிகள், சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் நேற்று வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கடுமையான பாதுகாப்புடன் காலை 11.30 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த முருகன், நீண்ட தாடி வளர்த்து, தலையில் குடுமி வைததிருந்ததுடன் காவி உடையும் அணிந்திருந்தார்.

விசாரணைகள் முடிந்ததையடுத்து 12.30 மணியளவில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த மார்ச் 25ஆம் நாள் நடத்தப்பட்ட சோதனையின் போது முருகனின் சிறைக் கூண்டில் இருந்து, 2 கைபேசிகளையும், 3 சிம் அட்டைகளையும், ஒரு மின்னேற்றியையும் கைப்பற்றியதாக சிறைச்சாலை அதிகாரிகள் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் வேலூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதியுடன் மாத்திரம் முருகன் சில வார்த்தைகள் பேசினார். மற்றபடி அவர் பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார்.

கைபேசிகள் கைப்பற்றப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, முருகனைப் பார்வையிடுவதற்கு வேலூர் பெண்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது மனைவியான நளினிக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.

அத்துடன் சிறிலங்காவில் இருந்து சென்றிருந்த முருகனின் தாயார் கடந்த செவ்வாய்க்கிழமை அவரைப் பார்க்க வேலூர் சிறைக்குச் சென்ற போதும், அவரையும் அதிகாரிகள் திருப்பி அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,