போராட்டத்தைக் கைவிடாதீர்கள்! – கேப்பாப்பிலவு மக்களிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை, காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபிலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, தமது காணிகளுக்குள் இரண்டு வீடுகளை மாத்திரமே இராணுவத்தினர் அமைத்துள்ளதாகவும், குறிப்பிட்டளவு காணிகளை இராணுவத்தினர் விடுவிக்க முடியாது என குறிப்பிடுவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என மக்கள் இதன்போது ஆதங்கம் வெளியிட்டனர். இதுமாத்திரமன்றி இராணுவத்தினர் நீச்சல்தடாகங்களை அமைத்து தமது காணிகளில் சுகபோகங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ள தமது காணிகள் அனைத்தையும் விடுவித்தால் மாத்திரமே தமது போராட்ட இடத்தைவிட்டு வெளியேறுவோம் என இராணுவத்திற்கு தாம் தெரியப்படுத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணி விடுவிப்பு தொடர்பில் போராட்ட மூலம் மாத்திரமே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் எனவும் இராணுவம் ஏதோவொரு காரணத்தை குறிப்பிட்டு காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கவே விரும்புவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Tags: ,