பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பவித்ரா கூறிய ராஜா கதை!

முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் பேசிய விடயம் தற்போது கொழும்பு அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பவித்ரா வன்னியாராச்சிக்கு பிரியாவிடை வழங்குவதற்காகவும், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை வரவேற்கவும் ஒரு சிறப்பு கூட்டம் சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்றது.

“எதிர்பாராத தருணத்தில் போக்குவரத்து அமைச்சகம், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தாம், ஜனாதிபதி செயலகத்திற்கு வரும் வரை தமக்கு இது தெரிந்திருக்கவில்லை” பவித்ரா வன்னியாராச்சி கூறியிருந்தார்.

அவர் தனது பிரியாவிடை உரையின் போது ஒரு புகழ்பெற்ற ராஜா கதையைப் பற்றி பேசியிருந்தார், இது ஒரு மறைக்கப்பட்ட செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறதா என்று சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறிய கதை….

“ஒரு ஊரில் அரசரும் அவரின் தலைமை ஆலோசகரும் (புரோகித) பயணமொன்று சென்றுகொண்டிருந்தார்களாம். போகும் வழியில் கண்ட மான் ஒன்றினை நோக்கி தனது வில்லை எடுத்து அம்பை எய்தினாராம் அரசர்..

ஏன் புரோகிதரே ஒருநாளும் இல்லாமல் குறி பிழைத்து விட்டது ? கேட்டாராம் அரசர். எல்லாம் நன்மைக்கே என்றாராம் அந்த புரோகிதர். இன்னுமொரு நாள் அரசரின் வாளால் அவரது விரலே வெட்டுப்பட்டுவிட்டது .ஏன் இப்படி நடந்தது என்று புரோகிதரிடம் கேட்டாராம் அரசர்.

எல்லாம் நன்மைக்கே என்று அதற்கும் பதிலளித்தாராம் அந்த புரோகிதர். இதனால் கோபமடைந்த அரசர் , புரோகிதரை குழியொன்றில் தள்ளிவிட்டு தனக்கு பிடித்த பாதையில் சென்றாராம்.

அப்போது காட்டுவாசிகள் பலர் அரசரை பிடித்துச் சென்று பலி கொடுக்க தயாராகினர். ஆனால் விரல் இல்லாத குறை அதாவது உடலில் குறை இருந்தபடியால் அவரை பலி கொடுக்க முடியாதென காட்டுவாசிகள் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

அட புரோகிதர் கூறியபடியால் தானே உயிர்தப்பினேன் என நினைத்த அரசர் ஓடிச் சென்று புரோகிதரை குழியில் இருந்து மீட்டுள்ளார்.

எல்லாம் நன்மைக்குத்தான் அரசரே என்று கூறிய புரோகிதர் , அன்று நான் இருந்திருந்தால் உடல் குறைபாடு இல்லாத காரணத்தினால் பலிகொடுக்கப்பட்டிருப்பேன்’ என்றும் குறிப்பிட்டாராம்.

அதனால் எதுவும் நன்மைக்கே என்று இருந்துவிட வேண்டும்” என்று அமைச்சர் பவித்ரா குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!