மாணவி கற்சிலையாக மாறுவாள் என்று காத்திருந்த பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஜோதிடர் சொன்னபடி மாணவி கற்சிலையாக மாறுவாள் என்று பொதுமக்கள் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. அவரது மகள் மாசிலா (வயது12). 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடவுள் பக்தியும், நம்பிக்கையும் அதிகம் கொண்ட மாசிலா, விரைவில் துறவியாக மாறப்போவதாகவும், சாமியாக போவதாகவும் கூறி வந்தார். இதனை அவரது பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டா லும் அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் மாசிலாவின் பெற்றோர் அவளது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காண்பித்து கேட்டனர். அப்போது அந்த ஜோதிடர், மாசிலா 12-வது பிறந்தநாளில் கற்சிலையாக மாறி விடுவார் என தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று மாசிலாவிற்கு 12-வது பிறந்தநாள் வந்தது. இதனால் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி மாசிலாவிற்கு பட்டு சேலை கட்டி பூ அலங்காரம் செய்யப்பட்டது.

மணமேல்குடியில் உள்ள வடக்கூர் அம்மன் கோவில் வளாகத்திற்கு மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டார். இந்த செய்தி மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. அங்கு 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குவிந்தனர்.

அலங்காரம் செய்து இருந்த மாசிலாவை பார்த்து பெண்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோ‌ஷமிட்டு சுற்றி வந்தனர். ஆனால் மாணவிக்கு அருள் வரவில்லை. அவர் கற்சிலையாகவும் மாறவில்லை. கோவில் பூசாரி அந்த மாணவியையும், அவரது பெற்றோரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!