ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு வீழ்ந்து விட்டது!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது, வௌவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என தெரிவித்த முருதொட்டுவாவே ஆனந்த தேரர், இரவு 10 தொடக்கம் அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியில் குறித்த பறவைகள் மாத்திரமே நடமாடும் என்றார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாட்டுக்காக குரல் கொடுத்த எமக்கு, புதிய அரசாங்கத்தை சரியாக வழிநடத்த, முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களையும் , உதவி செய்தவர்களையும் ஆட்சியாளர்கள் மறந்து விட்டனர். ஆனால், எமக்கு உரிமையுள்ளது என்றார்.

கொரோனா எச்சரிக்கை குறித்து, வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் கூறும் ஆலோசனைகளை, துளியளவு கூட கணக்கில் எடுக்காமல் செயற்படுகின்றனர் என தெரிவித்த அவர், தன்னிடம் உரையாடிய ஒருவர் என்ன நடக்கிறது? எதற்காக இவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்தீர்கள்? நீங்கள் கூறியதற்கமையவே அனைத்தையும் செய்தோம். இப்போதாவது ஏதாவது மாற்றத்தை செய்யுங்கள் என கோருகின்றார் என்றார்.

எனவே, இந்த அரசாங்கத்தால் மக்களை பாதுகாக்க முடியாதெனில், அதற்காக செய்ய வேண்டியதை செய்ய அதிகம் காலம் செல்லாதென, அரசாங்கத்துக்கு நினைவுப்படுத்துவதாகத் தெரிவித்த அவர், தற்போது முடிந்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கிராமத்துடனான சந்திப்புக்கு செல்லுமாறும் கேட்டுக்கொண்ட அவர், அவருக்கு முன்பு கிடைத்த வரவேற்பு இப்போது குறைந்திருக்கிறது என்றார்.

அதேபோல் பிரதமர் மஹிந்தவுக்கு இந்நாட்டில் கிடைத்த கௌரவம் 25 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர், எனவே மிகுதியுள்ள 75 சதவீத கௌரவமும் குறையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதால், அந்த 75 சதவீதத்தை சரி பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!