தாலிபான்கள் வருகை: தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் அதிபர் கூறிய அதிர்ச்சி தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அஷ்ரப் கனி கூறியதாவது, “எனது செருப்பை கழற்றிவிட்டு, பூட்ஸ் காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத்தெரியாவதவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர். அவசர அவசரமாக நான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். இந்த நிகழ்வுகள் மிகவும் வேகமாக நடைபெற்றுவிட்டது.

நான் மட்டும் அங்கு தங்கியிருந்தால், ஆப்கானிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை ஆப்கானியர்களின் கண்களுக்கு முன்பாக மீண்டும் தூக்கிலிடப்பட்டிருப்பார்” என்று கூறினார்.

மேலும், “தாலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன். அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தாலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.

நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என்றார்.

தாலிபான்கள் காபூலை முதன்முதலில் கைப்பற்றியபோது, ​​1996-ஆம் ஆண்டு ​​முன்னாள் ஜனாதிபதி முகமது நஜிபுல்லாவை அவர் தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் அலுவலகத்திலிருந்து இழுத்துச் சென்று, அவரை சித்திரவதை செய்தபின் ஒரு பொதுத் தெருவில் தூக்கிலிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!