மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க இன்று முதல் புதிய நடைமுறை அமுல்

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் அவர்களை நிர்வகித்தல் ஆகிய செயற்பாடுகளுக்காக இன்று முதல் புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்பு ஆகிய இரு முறைகளின் அடிப்படையில் இந்த புதிய நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளதாக, கொவிட் 19 தேசிய செயலணி அறிவித்துள்ளது.

இதற்கமைய, சுவாசப் பிரச்சினைகள் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் A என டைப் செய்து வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட்டு 1904 எனும் இலக்கத்துக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காய்ச்சல் நிலைமை உள்ள கொரோனா தொற்றாளர்கள் B எனவும், எந்தவொரு நோய் அறிகுறியும் அற்ற கொரோனா தொற்றாளர்கள் C எனவும் டைப் செய்து, வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட்டு 1904 எனும் இலக்கத்துக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெறும் குறுஞ்செய்திகள் கொவிட் 19 தேசிய செயலணியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றாளர்கள் வழங்கும் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டதன் பின்னர் 247 எனும் துரித அழைப்பு இலக்கத்தின் மூலம் தொற்றாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நோய் நிலைமையை உறுதிப்படுத்தி உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கைக்காக அம்பியூலன்ஸ் உள்ளிட்ட சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்காக 1390 எனும் துரித அழைப்பு இலக்கம் ஊடாக ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!