தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மறுசுழற்சி செய்ய இயலாத ப்ளாஸ்டிக் வகைகளை பயன்படுத்த தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது.

அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இதனை கண்கானித்தும், விதியை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றன. இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலமாக விமானத்தில் பயணம் செய்ய கூடிய நபர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் மூலம் முக கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு தயாரித்து வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அந்த முக கவசம் மற்றும் பேஸ் ஷீல்டை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக ஆய்வு மேற்கொண்டதில் அந்த பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் அடுத்த 7 நாட்களுக்குள் 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும் என இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!