‘படைகளை திரும்ப பெற்றதில் எந்த தவறும் இல்லை’ – ஜனாதிபதி ஜோ பிடன்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான போர் தீவிரமான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசமானது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மனிதாபிமான அடிப்படையில் கனியையும் அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தலீபான்கள் மீதான பயத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமைக்கு ஜோ பைடன் தான் காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க மக்களை வெளியேற்றுவது மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை கண்காணிப்பது பற்றி விவாதித்ததாக வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் அனைவரும் அழைத்து வரப்படும் வரை அமெரிக்க ராணுவம் அங்கு தங்கி இருக்கும். தேவைப்பட்டால் ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஆப்கானிஸ்தானில் 15,000 அமெரிக்கர்கள் உள்ளனர்.அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டு மக்கள் அனைவரையும் ஆகஸ்ட 31ம் தேதிக்குள் அமெரிக்கா அழைத்து வர திட்டமிட்டுள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற முடிவு செய்ததில் தவறு ஏதும் இல்லை.அமெரிக்க படைகளை எப்போது திரும்பப் பெற்றாலும் ஆப்கானிஸ்தானில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!