இனம், மதம்,மொழி, அரசியல் பேதங்களை கடந்து ஒன்றிணையுமாறு பேராயர் அழைப்பு.

நாடளாவிய ரீதியில இன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

மதம், இனம், மொழி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமென அவர் கேட்டு கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புப்பட்டவர்களைகண்டறிந்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவோம் என ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமானது குற்றவாளிகளை இதுவரை கண்டறியவில்லை என அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை திசை திருப்பும் முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான முயற்சிலேயே சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களை சந்தித்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோருக்கு தெரியாமல் இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை மறைப்பதற்காக இவர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களை நாடியுள்ளனர் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அத்துடன் குறித்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்களும் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாட்டிலுள்ள சகல முஸ்லீங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!