தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா? என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா?

தருமபிரானுக்கும் சகுனிக்கும் சூதாட்டம் நடக்கிறது. காய் உருட்டுவதில் மாயம் செய்யக் கூடிய சகுனி தருமபிரானை வெற்றி கொள்கிறான்.

தருமரோ தனது சொத்துக்கள் அத்தனை யையும் சூதாட்டத்தில் தோற்றுவிடுகிறார். ஈற்றில் தன் சகோதரர்களை சூதாட்டத்தில் வைத்து அவர்களையும் இழந்து விடுகிறார்.

பின்னர் தன்னைச் சூதாட்டத்தில் வைத்து தோற்கிறார். இறுதியில் திரெளபதியை சூதாட்டத்தில் வைத்து பறிகொடுக்கிறார். இவை நடந்து முடிய சபைக்கு திரெளபதி அழைக்கப்படுகிறார்.

சூதாட்டத்தில் திரெளபதியை தாம் வென்று விட்டதாக கெளரவர் தரப்பு அறிவிக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் சபையைப் பார்த்து திரெளபதி சபையோரே! என் கணவர் தருமபிரான் சூதாட்டத்தில் தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா? அல்லது என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

இங்குதான் உரிமைப் பிரச்சினையைத் திரெ ளபதி கிளப்புகிறார். தருமர் தன்னைத் தோற்ற பின்னரே என்னைத் தோற்றார்.

தன்னைத் தோற்றபின் என்னை சூதாட்டத் தில் வைப்பதற்கு தருமருக்கு உரிமையோ அதி காரமோ கிடையாது.

ஆக, சட்டப்படி என்னைச் சூதாட்டத்தில் தோற்றதென்பது செல்லுபடியற்றது என்று வாதிடுகிறார்.

திரெளபதியின் இந்த வாதத்தில் இருக்கக் கூடிய நியாயத்துவம் எளிதில் மறுதலிப்பதற் குரியதல்ல.

எனினும் கெளரவர் தரப்பில் நீதிக்கு இட மில்லை எனும்போது திரெளபதியின் வாதம் அடிபட்டுப் போகிறது.
இதை நாம் கூறும்போது இந்தக் கதை இப் போது எதற்கானது என்று நீங்கள் கேட்கலாம்.

இங்குதான் வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குமான தற்போதைய உறவு நிலை புலப்படுகிறது.

அதாவது வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று நம்பிக்கையில் லாப் பிரேரணையைக் கொண்டுவந்ததோ அன்றோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மான உறவும் தொடர்பும் முற்றுமுழுதாக அறுந்து விட்டது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களு க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை யைக் கொண்டு வந்து இரவோடு இரவாக அதனை ஆளுநரிடம் கையளித்த அந்தக் கணமே கூட்டமைப்புப் பற்றிய நிலையை முதலமைச்சர் அறுத்தெறிய வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை வடக்கின் முதலமைச்சராகக் கொண்டு வந்திருந்தாலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தபோது அதனை எதிர்த்து தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு எங்கள் தலைவர் முதல மைச்சர் விக்னேஸ்வரன் என்று அண்டம் அதிர ஆர்ப்பரித்தனர்.

இதனால் அதிர்ந்துபோன கூட்டமைப்பு நம்பிக் கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றது.

ஆகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனி தமிழ் மக்களுக்குச் சொந்தமானவர், தங்கள் தலைவனை தமிழ் மக்கள் காப்பாற்றியது எங்களை அவர் காப்பாற்றுவார் என்றே.

ஆகையால் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் களத்தில் இறங்குவது கட்டாயமானது என்பதைத் தமிழ் மக்கள் முன்கூட்டியே உணர்த்திவிட்டனர்.