கல்லூரிகள் திறப்பு: ஆசிரியர்கள், மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்!

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 1-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. அவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ள கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் போட்டு இருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை

* தடுப்பூசி போட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அரசு கேட்கும்போது உடனே வழங்கப்பட வேண்டும்.

* கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகள் இணையவழி வகுப்புகளையே தொடருவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையை பெற வேண்டும்.

* சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி போடாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்.

* நோய்த்தொற்று அறிகுறி உள்ள மாணவர்களை கண்டறிந்தால், உடனே அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சுத்தம் செய்ய வேண்டும்

* மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகைதர வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், டீ கப்புகள், டயர்கள் இருக்கும் இடங்களை உடனே துப்புரவு செய்து கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

* நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்பு குழு அமைத்து அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

* கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாகவே கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்திட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!