இந்தியாவில் செய்தி இணையதள சேவையை நிறுத்திய ‘யாகூ’ நிறுவனம்!

பிரபல ‘யாகூ’ நிறுவனம், இந்தியாவில், அதன் செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.புதிய அன்னிய நேரடி முதலீட்டு விதியின் கீழ், இந்தியாவில், ‘டிஜிட்டல்’ ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததை அடுத்து, யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ‘யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மேக்கர்ஸ் இந்தியா’ ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன.இவற்றில் நேற்றிலிருந்து உள்ளடக்கங்கள் எதுவும் இடம்பெறாது. இருப்பினும், இதனால் யாகூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் நடைமுறைக்கு வரும் புதிய அன்னிய நேரடி விதிமுறைகளின்படி, இந்தியாவில் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில், மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதம் வரை மட்டுமே இருக்கலாம். யாகூ நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக இத்தகைய சேவைகளை வழங்கி வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!