ஆப்கானிஸ்தான் இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு நாங்கள் தான் பொறுப்பு என ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் இதுவரை 103 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட காபூல் நகரில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பானது, தாக்குதலில் ஈடுபட்டவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் Abdul Rehman Al-Loghri என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுத்து வரும் அமெரிக்க துருப்புகளுக்கு அருகே 5 மீற்றர்கள் வரையில் தற்கொலை வெடிகுண்டு தாரியால் நெருங்க முடிந்தது என ஐ.எஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அரேபிய மொழியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்த வெடிகுண்டு தாக்குதலில் 150 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், குறைந்தது 90 ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி 13 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி முனையில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர்,

அமெரிக்கா, கனடா, பிரித்தானிய துருப்புகளால் வெளியேற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், கடந்த 12 நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!