சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை

இலங்கையில் சீனியின் விலை கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது. இதற்கமைய தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 210 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் 115 ரூபா முதல் 130 ரூபா வரையான விலைகளில் விற்பனையான சீனி கிலோ கிராம் ஒன்றின் விலை தற்போது 210 ரூபா முதல் 220 ரூபா வரையில் விற்பனையாகின்றது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

105 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய சீனியே தற்போது 200 ரூபாவுக்கும் மேலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே நாட்டில் அதன் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து சீனி நீக்கப்பட்டுள்ளது எனவும், இதனாலேயே அதன் விலை கட்டுப்பாடு இன்றி உயர்வடைந்து செல்கின்றது எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இதற்குக் கட்டுப்பாட்டு விலையை அறிவித்து விலையைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் கூறியுள்ளனர்.

இலங்கை மக்கள் வருடாந்தம் சுமார் 500 மெட்ரிக் டொன் சீனியைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

அதனை ஈடுசெய்ய 100 மெட்ரிக் டொன் சீனி நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதுடன், எஞ்சிய தொகை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!