ஈழத்தமிழர்களுக்கு விரைவில் குடியுரிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் நலன் தொடர்பாக பேரவை விதி 110-ன் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர்கூறியதாவது:-

108 முகாம்களில் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் 1983–ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்து காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்.

1983-ம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில், 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கல்வி கட்டணம் அரசே செலுத்தும்

மேலும், 13 ஆயிரத்து 540 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 87 பேர் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்து, வெளிப்பதிவில் வசித்து வருகிறார்கள். இலங்கை தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

என்ஜினீயரிங் படிப்பு பயிலுவதற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்து கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். மேலும், வேளாண்-வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும்.

உதவித்தொகை உயர்வு

அதுமட்டுமின்றி, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்வாழ் இலங்கை தமிழர்களில் கல்வி பயிலும் 750 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, பாலிடெக்னிக் படிப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய்; இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு 12 ஆயிரம் ரூபாய்; இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு, மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத்தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசிற்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக 21 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவாகும்.

அரிசி, கியாஸ் சிலிண்டர் இலவசம்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா கியாஸ் இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒரு முறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். அதைத்தவிர, குடும்பத்திற்கு 5 கியாஸ் சிலிண்டருக்கு தலா 400 ரூபாய் வீதம் மானியத்தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரேஷனில் தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும். இதற்கான செலவுத் தொகையான 19 லட்சம் ரூபாயையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

ரூ.30 கோடி ஒதுக்கீடு

முகாம் வாழ் தமிழர்களின், முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 5 ஆயிரம் முகாம் வாழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறு குறு தொழில்கள் செய்திட ஏதுவாகவும், முகாம்களில் உள்ள 300 சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, ஒவ்வொரு சுயஉதவிக்குழுவுக்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 சுயஉதவிக் குழுக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயுடன், மேலும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக நடப்பு நிதி ஆண்டில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சமையல் பாத்திரங்கள்

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவச ஆடைகளும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790 ரூபாயில் இருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டொன்றுக்கு 3 கோடி ரூபாய் கூடுதல் செலவீனம் ஏற்படும்.

குழு அமைப்பு

இதைத்தவிர, முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகால தீர்வினை கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், எம்.பி. ஒருவர், எம்.எல்.ஏ. ஒருவர், பொதுத்துறை செயலாளர், மறுவாழ்வுத்துறை இயக்குனர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும்.

ரூ.317 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத்தமிழர் நலனை பேணிட இந்த அரசு வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தலுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாய், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்திட 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மற்றும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட 43 கோடியே 61 லட்சம் ரூபாய், என மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!