சிறுவனின் உயிரை பறித்த மனிதநேயம்!

இரயில்வே தண்டவாளத்தில் நின்ற மாட்டினை விரட்டும் முயற்சியில் சிறுவன் இரயிலில் அடிபட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் தாராசுரம் மிசின் தெரு பகுதியை சார்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலீப்குமார் (வயது 14). திலீப்குமார் கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

தற்போது, விடுமுறை என்ற காரணத்தால் தந்தைக்கு உதவியாக இருந்து, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில், தாராசுரம் இரயில்வே கேட் பகுதியில் மாடுகளை சிறுவன் மேய்த்துக்கொண்டு இருக்கையில், ஒரு மாடு இரயில்வே தண்டவாளப்பகுதிக்கு சென்றுள்ளது.

இதன்போது, மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ஜனசதாப்தி இரயில் சென்ற நிலையில், மாடு இரயிலில் அடிபட்டுவிடக்கூடாது என அங்கிருந்து விரட்ட, அது தொடர்ந்து இரயில் தண்டவாளத்திற்கு நடுவே சென்று நின்றது.

இரயில் தண்டவாளத்தில் நின்ற மாட்டினை விரட்டும் முயற்சியில் சிறுவன் பரிதாபமாக இரயிலில் அடிபட்டு உயிரிழந்தான். இரயில் வருவதை கண்ட மாடு இறுதியாக அங்கிருந்து சென்றது. இந்த விஷயம் தொடர்பாக கும்பகோணம் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!