51 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் மக்கள் தொகை சரிவு!

கொரோனா பயண கட்டுப்பாடுகள் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாக தெரிகிறது.

சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்கள் தொகை 54 லட்சத்து 50 ஆயிரமாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிங்கப்பூரின் தேசிய மக்கள் தொகை மற்றும் திறமை பிரிவு நடத்திய கணக்கெடுப்பின் முடிவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை கடந்த ஆண்டை விட 4.1 சதவீத குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது சிங்கப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட 1970-ம் ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.


சிங்கப்பூரில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்ததே மக்கள் தொகை எண்ணிக்கை குறைய முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
கொரோனா பயண கட்டுப்பாடுகள் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாக தெரிகிறது.


சிங்கப்பூர் குடிமக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 0.7 சதவீதம் குறைந்து 35 லட்சமாக குறைந்துள்ளதாகவும், நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் குறைந்து 4 லட்சத்து 90ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நிரந்தர குடியுரிமை பெறாத மக்களின் எண்ணிக்கை 10.7 சதவீதம் குறைந்து 14 லட்சத்து 70 ஆயிரமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.