அடி பணிந்து பொது எதிரணியில் இணையமாட்டோம்! – தயாசிறி பதிலடி

அடி பணிந்து சென்று பொது எதிரணியில் உறுப்புரிமை பெறவும் மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திர கட்சியின் 16பேர் அணியைக் கடுமையாக விமர்சித்து வரும் பிரசன்ன ரணதுங்க எம்.பிக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பிரதம நிறைவேற்று அதிகாரி குழம்பிப்போனால் கம்பனி திடீரென வீழ்ச்சியடையும். இப்படியொரு நிலைதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. கம்பனியொன்று சரிவை எதிர்கொண்டால் அதை மீளக் கட்டியெழுப்புவது பற்றியே சிந்திக்க வேண்டும்.

அத்துடன், மற்றுமொரு நிறுவனத்தில் இணைவது தீர்வாகாது. எனவே, சுதந்திரக் கட்சியை மீளப் பலப்படுத்துவதே எமது நோக்கம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமையை எடுக்கமாட்டோம்.

நாம்மட்டுமல்ல, பொது எதிரணியிலுள்ள உறுப்பினர்கள்கூட இன்னும் உறுப்புரிமையைப்பெறவில்லை. அவ்வாறு பெற்றால் எம்.பி. பதவி பறிபோய்விடும்.16 பேர்கொண்ட அணி இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்துள்ளதாக பிரசன்ன ரணதுங்கஎம்.பி. விமர்சிக்கின்றார்.

நாம் இரு பக்கங்களும் கால்வைக்கவில்லை. எமக்குசொந்த வீடு (சுதந்திரக் கட்சி) இருக்கின்றது. எனவே, வாடகை வீட்டில் (பொதுஜன பெரமுன) குடியேறத் தேவையில்லை. அடிபணிந்து, எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொண்டு அரசியல் நடத்துவதற்கு நாம் தயாரில்லை.

மேலும், பொது எதிரணியுடன் இணைந்து செயற்பட நாம் விரும்புகின்றோம். அதேபோல் தனித்து இயங்குவதும் எமக்குப் பிரச்சினை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!