ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு

எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டில் அடிப்படைவாத தாக்குதல் நடத்தப்படலாம் என ஊடகங்களுக்கு கூறியமை சம்பந்தமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் (Galagoda Aththe Gnanasara) வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்த வகையிலும் ஞானசார தேரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய போவதில்லை எனவும், எனினும் கட்டாயம் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வார்கள் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (Major General K.Jagath Alwis) ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இவ்வாறு புலனாய்வுப் பிரிவினர் தேரரிடம் பெற்றுக் கொள்ளும் தகவல்களுக்கு அமைய அச்சுறுத்தல்கள் இருக்குமாயின் அது சம்பந்தமாக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மிகவும் பாரதூரமான தகவலை வெளியிட்ட ஞானசார தேரரிடம் விசாரணைகளை நடத்துமாறு கத்தோலிக்க திருச்சபை உட்பட பல தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சாதாரண நபர் ஒருவர் ஊடகங்களில் அல்லது சமூக வலைத்தளங்களில் இப்படியான பாரதூரமான தகவல்களை வெளியிட்டிருந்தால், அவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருப்பார்கள் எனவும், ஞானசார தேரர் தொடர்பிலான பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!