அரச நிறுவனங்களில் பயன்பாடின்றி காணப்படும் வாகனங்களை பாவனைக்கு உட்படுத்துமாறு நிதியமைச்சர் பணிப்புரை

அரச நிறுவனங்களில் பயன்பாடு இன்றி காணப்படுகின்ற வாகனங்களை, மீள் வடிவமைத்து பாவனைக்கு உட்படுத்துமாறு நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, அரச நிறுவனங்களின் பிரதானிகள், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், தனக்கு அறிவிக்குமாறு நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களில் பல்வேறு வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நடவடிக்கைகள் மேள்கொள்ளப்படுகின்றனவா எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்தரன நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதிக்குள்ள வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்ததாகவும், வீண்விரயம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்

அத்துடன், பயன்பாட்டில் இல்லாத பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளை மீள் வடிவமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான பிரத்தியேக மத்திய நிலையமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!