ஒன்ராறியோவில் பலரை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய துயர சம்பவம்!

ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் லைல் தெரு மற்றும் கிங் தெரு பகுதியில் இருந்து 911 இலக்கத்தை தொடர்பு கொண்டு குழந்தை தவறி விழுந்தது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், ஆபத்தான நிலையில் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அக்டோபர் 2ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் குழந்தை அதே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.

இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் திங்களன்று பூக்கள், பொம்மைகள் என வைத்து அப்பகுதி மக்கள் நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குழந்தையின் மரணம் கண்டிப்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவர்களுக்கு சிறு மாற்றத்தையேனும் ஏற்படுத்தும் என, நீண்ட காலமாக குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வலி கண்டிப்பாக ஆறும் என குறிப்பிட்டுள்ள அவர், என்ன நடந்தது என்பதை மக்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பார்கள் என்றார். குழந்தை மரணமடைந்த துயரத்தில் இருந்து அதன் பெற்றோர்கள் மீளவில்லை என்றே, அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையின் பாலினம் அல்லது வயது உட்பட எந்த தகவலையும் லண்டன் பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர். ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், 19 அல்லது 20வது மாடியின் பால்கனியில் இருந்து குழந்தை தவறி விழுந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!