ஏலத்தில் ‘ஏர் இந்தியா’: வாங்கப்போவது யார்?

ஏர் இந்தியா’ நிறுவனத்தை யார் வாங்குவது என்ற போட்டியில், வெற்றி பெறப்போவது ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்தின் புரமோட்டரான அஜய் சிங்கா அல்லது, ‘டாடா சன்ஸ்’ நிறுவனமா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.இதற்கிடையே, கடந்த வாரம் ஏர் இந்தியா ஏலத்தில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. பின், அரசு தரப்பில் அது மறுக்கப்பட்டது.

இந்நிலையில், ‘அஜய் சிங், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை மீட்க தன்னிடம் பணம் இல்லை என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். ‘அப்படி தெரிவித்த அவரால் எப்படி ஏர் இந்தியாவை ஏற்று நடத்த முடியும்? இது ஒன்றே போதுமானது; அவரது விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு’ என, சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

கைவிரித்த சிங்:விமான தயாரிப்பாளர் டி ஹாவிலாண்டு உடன் ஏற்பட்ட பிரச்னையின் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 24ம் தேதியன்று, அஜய் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், நிறுவனத்தில் மேற்கொண்டு முதலீடு செய்யும் அளவில் தன்னிடம் வசதி இல்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே, அவர் எப்படி ஏர் இந்தியாவை ஏலம் கேட்க முடியும் என கேள்விகள் எழுப்பப் படுகின்றன.ஏர் இந்தியாவை வாங்க, அஜய் சிங் தனிப்பட்ட முறையில் தான் விண்ணப்பித்து உள்ளார். மேலும், அவர் வங்கி உத்தரவாதத்துக்காக, பாரத ஸ்டேட் வங்கியையும் அணுகி உள்ளார். இதற்காக தன்னுடைய தனிப்பட்ட பங்குகளையும், சொத்துக்களையும் அடமானமாக வைக்க இருப்பதாகவும் எஸ்.பி.ஐ., டெல்லி கிளையில் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், இம்முயற்சி குறித்து அஜய் சிங் தரப்பிலிருந்தோ, எஸ்.பி.ஐ., தரப்பிலிருந்தோ எந்தவித பதிலும் இல்லை.மேலும் அஜய் சிங், ஏலத்தில் எவ்வளவு தொகையை குறிப்பிட்டு உள்ளார் என்பதும் இன்னும் தெரியவில்லை.அமெரிக்க நிறுவனங்கள்:இருப்பினும் சில வட்டாரங்கள், அஜய் சிங் ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுப்பதற்காக 7,500 கோடி ரூபாய் நிதியை ஏற்படுத்தி இருப்பதாகவும்; இதில் அமெரிக்காவை சேர்ந்த இரு நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

மேலும், ‘ஸ்பைஸ் ஜெட் கார்கோ’ வணிகத்திலிருந்து வெளியேறி, 2,500 கோடி ரூபாய் திரட்டவும் அவர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இங்கு தான், ஏர் இந்தியாவை மீட்கும் வகையில் அவருக்கு திறன் இருக்கும் நிலையில், ஏன், நீதிமன்றத்தில் ஸ்பைஸ் ஜெட்டை மீட்க திறன் இல்லை என தெரிவித்தார் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!