வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தகவல்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ( Douglas Devananda ) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பு, கடல் பாசி செய்கை மற்றும் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புகின்ற தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து பயனாளர்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடற்றொழில் அமைச்சின் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்தத் திட்டங்களிற்காக களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் சுமார் 11 கோடி 65 இலட்சம் ரூபாய்களும் சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக சுமார் 2 கோடி 90 இலட்சம் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவினரால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வடக்கு மாகாணத்தில் கடல் பாசி செய்கை மேற்கொள்வதற்காக 100 பயனாளர்களும் கலட்டை வளர்ப்பிற்காக 100 பயனாளர்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்காக 50 பயனாளர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதனைவிட தெரிவு செய்யபட்ட நன்னீர் நிலைகளில் இறால் மற்றும் மீன் குஞ்சுகளை விடுவதன் மூலம் அந்தந்தப் பிரதேச மக்களுக்க வாழ்வதாரத்தினை எற்படுத்தல் போன்ற சுமார் 7 வேலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போன்று சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி கடல் பாசி செய்வதற்கு 115 பயனாளர்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்கு 60 பயனாளர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

குறித்த இரண்டு திட்டங்களிற்காகவும் தெரிவு செய்யப்படுகின்ற பயனாளர்களுக்கு கடல் பாசி வளர்ப்பிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்காக தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்களும் கடலட்டை வளப்பிற்காக தலா 5 இலட்சம் ரூபாய்களும் வழங்கப்படவுள்ளன.
குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பயனாளர்கள் தெரிவுகள் ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில், திட்டங்கள் தொடர்பாக பயனாளர்களுக்கு தெளிவுபடுத்தி, இந்த நிதியுதவியைப் ஆரம்ப முதலீடுகளாகக் கொண்டு நீடித்த பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பயனாளர்கள் தொடர்ச்சியாக வழிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!