வியாபாரிகள் முன் மண்டியிட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி!

நிறைவேற்று அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக தன் வசப்படுத்திக் கொண்டுள்ள ஜனாதிபதியினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன் என்ன ? அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தை அரசாங்கம் நீக்கிக்கொண்டதன் மூலமாக இந்த நாட்டில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக அரசாங்கம் இல்லை என்பதை நிருபித்துள்ளதென, முருந்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளனர்.

அபெயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த விவகாரங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ நாட்டின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டை பாதாளத்தில் தள்ளி விட்டனர். வெறுமனே நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக்கொண்டு ஆட்சி நடத்துவது மட்டுமே இவர்களின் நோக்கம் என்பது இப்போது வெளிப்படுவதாக கருதுகின்றோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் மக்களுக்கும், இந்த அரசாங்கத்தை உருவாக்கிய எமக்கும் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை அரசாங்கம் நீக்கியமை நல்ல விடயம் என நாம் கருதவில்லை. வியாபாரிகளுக்கு அடி பணிந்தோ அல்லது, தமது சகாக்களை திருப்தியிப்படுத்தவோ இறுதியாக இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை அரசாங்கம் செய்யக்கூடாது. இது குறித்து கடுமையான கண்டனத்தை நாம் பதிவு செய்கின்றோம், அதேபோல் ஆசிரியர் சங்கங்களில் பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பலர் என்னை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

அண்மையில் முன்னாள் சபாநாயகர் தலைமையில் சகல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் என்னை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து தெரிவித்தனர். ஆசிரியர் சங்கங்கள் என்னை சந்தித்து தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட பிரச்சினையாக இதனை கருத வேண்டும். அரசாங்கம் இந்த விடயங்களில் உண்மையாக, நேர்மையான தீர்மானங்களை முன்வைக்க வேண்டும்.

அதேபோல் ஆசிரியர்களும் நிலைமைகளை கருத்தில் கொண்டு மாணவர்களுக்காக சில தியாகங்களை செய்ய வேண்டும். நாம் இந்த விடயத்தில் தலையிட்டு அரசாங்கத்துடன் பேசி ஒரு தீர்மானம் எடுக்க உதவி செய்கின்றோம் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளோம். அடுத்த மாதம் 21ஆம் திகதி இதற்கு தீர்வு கிடைக்கும் என அரசாங்கம் கூறியுள்ளது. ஆகவே யாரும் குழப்பங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்தாது செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.
இது குறித்து அரசியல் தளத்தில் முக்கிய ஒருவராக செயற்படும் ஓமல்பே சோபித தேரர் கருத்து கூறுகையில்,

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்கின்றது என்றால் இந்த நாட்டில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக அரசாங்கம் இல்லை என்பதே அதன் வெளிப்பாடாகும். நாட்டில் மக்களின் நலன்களை பாதுகாக்க அரசாங்கம் என்ற ஒன்று நாட்டில் இல்லை என்பதை இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது.

இதுவரை காலமாக இல்லாத அளவிற்கு இந்த அரசாங்கம் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டுள்ளது. சட்டம், நீதி, ஏனைய சகல துறைகளை விடவும் ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியினால் உறுதியான ஒரு தீர்மானம் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நாட்டில் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வியாபர்கள் ஒரு சிலர் முன்னிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை மண்டியிட வைத்துவிட்டனர்.

இவ்வளவு அதிகாரங்களை தன்வசப்படுத்தியுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் பயன் என்ன? இந்த தீர்மானங்களை எடுக்கத்தான அவருக்கு நிறைவேற்று அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என செயற்பட்டனரா? இப்போது அரசாங்கம் செய்துகொண்டுள்ள தவறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். விலை நிர்ணயத்தில் அரசாங்கம் தலையிடாது போனால் மக்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் அதிகளவில் சந்தித்த அரசாங்கமாக இது மாறிவிடும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!