தாய்மைக்கு தலை வணங்குவோம்

எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் காலம் முழுவதும் பிள்ளைகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கும் தாய்மைக்கு தலை வணங்குவோம்!

தாய்மைக்கு தலை வணங்குவோம்
அன்பு.. அரவணைப்பு.. அர்ப்பணிப்பு.. அத்தனையும் ஒருசேர கலந்த தியாகத்தின் பிறப்பிடம் தாய்மை. குழந்தை கருவில் வளரும்போதே தனது வாய்க்கு கட்டுப்பாடு விதித்துக்கொண்டவள். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே தன்னுடைய விருப்பமான உணவுகளை வெறுத்து ஒதுக்கியவள். குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக தன்னுடைய ஆசைகளை அடக்கி, அவர்களின் ஒவ்வொரு தேவைகளையும் உணர்வுபூர்வமாக உணர்ந்து, அவைகளை நிறைவேற்ற முழுமூச்சாக பாடுபடுபவள். காலங்கள் உருண்டோடி போயிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் மட்டும் மாறியதே இல்லை.

சிறுவயதில் தாய் தங்களை எப்படி வளர்த்தாள் என்பதை பிள்ளைகள் அறிந்திருக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தங்களது குழந்தைகளை மனைவி எப்படி வளர்க்கிறாள் என்பதை பார்த்தே தாய்மையின் அர்ப்பணிப்பு வாழ்க்கையை உணர்வுபூர்வமாக உணரலாம். ஏழையாக இருந்தாலும், மாடமாளிகையில் வாழ்ந்தாலும் வசதி வாய்ப்பில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஏழைத்தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பும், பணக்கார தாயின் குழந்தை பாசமும் ஒரே அளவுகோலாகத்தான் வெளிப்படும்.

குழந்தையின் பசி போக்காமல் தான் உணவு உண்ண விரும்ப மாட்டாள். விளையாட்டு மோகத்தில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தாலும், விளையாட்டு காட்டியே சாப்பிட வைத்துவிடுவாள். குழந்தையின் பசி நீங்கினால்தான் நிம்மதி அடைவாள். தன் குழந்தை வாய் பேச முடியாதவனாகவோ, ஊனமுற்றவனாகவோ, உருவமே உருமாறி காட்சி யளிப்பவனாகவோ இருந்தாலும் முகம் சுளிக்காமல் அரவணைப்பு காட்ட தாயால் மட்டுமே முடியும்.

ஆறுதல் வார்த்தைகள் ஆயிரம் பேர் கூறலாம். ஆனால் உள்ளார்ந்த அன்பு தாயிடம் மட்டுமே உணர்வு பூர்வமாக வெளிப்படும். ஆறுதலோடு, அரவணைத்து துயரத்திலும், சந்தோஷத்திலும் துணை நிற்பாள். வசதி, வாய்ப்புகள் வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆனால் தாய்மை வெளிப்படுத்தும் பாசம் என்றென்றும் மாறாதது. எல்லா பிள்ளைகளிடமும் பாரபட்சம் காண்பிக்காமல் ஒரே மாதிரியாகவே வெளிப்படும். மனித பிறப்புக்கு மட்டுமல்ல உலக உயிர்கள் அனைத்துக்கும் அன்னையே பிரதானம். அனைத்து உயிர்களிடமும் தாய்மை வெளிப் படுத்தும் பாசத்தில் பாகுபாட்டுக்கு இடமில்லை என்பதே நிதர்சனம்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டப்பட்டு வருகிறது. இன்றைய நாள் அன்னையின் அர்ப் பணிப்பு வாழ்க்கையை நினைவுகூரும் நாளாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. என்றென்றும் தாய்மையின் தியாகத்திற்கு மதிப்பு கொடுங் கள். குறிப்பாக முதுமை காலத்தில் அவர்களை உடன் வைத்து உபசரித்து, அன்பாக ஆறுதல் மொழி பேசி அரவணையுங்கள். வயோதிகம் அவர்களின் வாழ்க்கையை சுமையானதாகவோ, தனிமைப்படுத்துவதாகவோ கருத வைத்துவிடக்கூடாது. அவர்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ரசித்து வாழ பக்கபலமாக இருங்கள்.

கருவில் தாங்கி, கண்ணயராது வளர்த்து ஆளாக்கிய தாயை காலமெல்லாம் கண் கலங்காமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பெற்றெடுத்தபொழுது மகிழ்ந்ததை காட்டிலும் உங்களுடைய அன்பான உபசரிப்பால் என்றென்றும் அவர்களை மகிழ்விக்க செய்யுங்கள். ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பையும், அரவணைப்பையும் மட்டும்தான். எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் காலம் முழுவதும் பிள்ளைகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கும் தாய்மைக்கு தலை வணங்குவோம்!

Tags: