குடும்ப நலனில் அக்கறை காட்டும் மனைவியை உற்சாகப்படுத்துங்க

குடும்ப நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாளும் பெண்களை அவ்வப்போது உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

குடும்ப நலனில் அக்கறை காட்டும் மனைவியை உற்சாகப்படுத்துங்க
குடும்ப நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாளும் பெண்களை அவ்வப்போது உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது அவர்களை மேலும் உற்சாகத்துடன் செயல்பட தூண்டும்.

* பெண்கள் அலங்காரம் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள். திருமணத்திற்கு பிறகு அலங்காரத்திற்கு போதுமான நேரம் ஒதுக்க முடிவதில்லை என்ற மனக்குறை இருக்கும். அவர்கள் செய்யும் எளிய அலங்காரத்தை பாராட்டினாலே குஷியடைந்துவிடுவார்கள். ‘இன்னைக்கு உன்னுடைய ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது, வழக்கத்தை விட இன்றைக்கு உன் முகம் பொலிவாக இருக்கிறது’ என்று பாராட்டினால் அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிடும்.

* புதிய வகை ஆடை உடுத்தியதும், கணவர் ஏதாவது கருத்து சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான பெண்களிடம் இருக்கும். அதனை புரிந்து கொண்டு ‘இந்த ஆடை உனக்கு எடுப்பாக இருக்கிறது’, ‘உன் வயசும் கொஞ்சம் குறைந்துவிட்டதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகிறது’ என்பன போன்ற வார்த்தைகள் அவர்களை சந்தோஷப்படுத்தும்.

* திருமணமான பெண்களில் பலர் உடல் எடையை குறைப்பதற்கு மெனக்கெடுவார்கள். ஒவ்வொரு நாளும் எடையை குறைப்பதற்கான முன்னேற்பாடுகளில் ஆழ்ந்த கவனம் செலுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ‘கொஞ்ச நாளாகவே உன் உடல் தோற்றத்தில் மாற்றம் தெரியத் தொடங்கி யிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஆளே இளைச்சிடுவே போலிருக்கே’ என்று கூறினால் போதும். உடல் எடையை குறைக்க மும்முரமாகிவிடுவார்கள். தீவிர பயிற்சிகளில் களம் இறங்கிவிடுவார்கள்.

* உண்மையான வயதை காட்டிலும் சற்று வயதை குறைத்து மதிப்பிட்டு பேசினாலே உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.

* பொதுவாகவே பெண்கள் வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று கழிக்க ஆசைப்படுவார்கள். நிறைய பேருக்கு காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ துணையுடன் நெடுந்தூர பயணம் மேற்கொள்வது பிடிக்கும். அவர்கள் ஏற்கனவே பள்ளி, கல்லூரி பருவத்தில் சென்றிருந்த இடத்திற்கு அழைத்து சென்றால் உற்சாகமாகிவிடுவார்கள். தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் விருப்பப்படுவார்கள். அவைகளை ஆர்வமுடன் கேட்க தொடங்கினால் குதூகலம் அடைந்துவிடுவார்கள்.

* பிறந்தநாள், திருமண நாளின்போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி கொடுத்தாலோ, அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம் ‘கிப்ட்’ கொடுத்தாலோ உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.

Tags: ,