அமைச்சருக்கு புரிதல் இல்லை! – தயாசிறி ஜயசேகர

விவசாய அமைச்சருக்கு விவசாயத்தைப் பற்றிய புரிதல் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

உரம் தொடர்பான தற்போதைய நெருக்கடிக்கு அமைச்சர் மட்டுமல்ல, முழு அரசாங்கமும் பொறுப்பு என்றாலும், எழுந்துள்ள சூழ்நிலை குறித்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) மிகவும் பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரசாயன உரத்திற்குப் பதிலாக கரிம உரத்தைப் பயன்படுத்துவது படிப்படியாக செய்யப்பட வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் இரசாயன உரத்தைத் தடை செய்வதன் மூலம் விவசாயி இயற்கை விவசாயத்திற்குப் பழக்கப்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் நெல் விவசாயிகள், காய்கறி விவசாயிகள் மற்றும் ஏற்றுமதி பயிர்களை வளர்ப்பவர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை உடனடியாக மாற வேண்டும் என்றும் இரசாயன உரங்களின் பயன்பாட்டை மீண்டும் அனுமதிக்க வேண்டும் எனவும் இயற்கை விவசாயத்தை முறையாக ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!