அமைச்சர் மனோவை கேள்வி கேட்க ஞானசாரதேரர் யார்? – கல்வி இராஜாங்க அமைச்சர் கேள்வி

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்ட ஞானசார தேரர் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அதேபோல செயற்படுகின்றார். இவரின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அமைச்சர் மனோகணேசனின் அமைச்சிற்கு சென்று அவரை அச்சுறுத்தியமையானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயம் தமிழ் முற்போக்கு கூட்டணின் பிரதி தலைவர் என்ற வகையில் இதனை வண்மையா கண்டிக்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (19.05.2017) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

அமைச்சர் மனோகணேசன் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்து பாடுபட்ட ஒருவர்.அவருடைய அமைச்சிற்கு பௌத்த துறவி ஒருவர் சென்று அவரை அச்சுறுத்தி ஒரு தமிழர் இந்த அமைச்சில் இருக்க கூடாது ஒரு பெரும்பான்மையினத்தவரே இருக்க வேண்டும் என கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.இவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?இதே செயலை ஒரு இந்து மதத்தை சேர்ந்த ஒருவரோ அல்லது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவரோ அல்லது முஸ்லிம் மதத்தை சோந்த ஒருவரோ செய்திருந்தால் இன்று அவர்களின் நிலைமை என்ன? பௌத்த துறவிகள் என்பவர்கள் விகாரைகளில் இருந்து மத போதனைகளை செய்ய வேண்டும்.

அதை விடுத்து சண்டியர்களைப்போல செயற்படுவதானது அந்த மதத்திற்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலாகவே கருத வேண்டியுள்ளது.எமது நாட்டில் சர்வதேச வெசாக் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு ஒரு சில நாட்களில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்திருக்கின்றமையானது வருத்தத்திற்குறி ஒரு விடயமாகும்.இதனை திட்டமிட்ட அடிப்படையில் எமது நல்லாட்சி அரசாங்கத்திற்கு சேறு பூசும் வகையில் நடைபெற்றதா?என்ற சந்தேகமும் எழுகின்றது.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நாளை எங்களுக்கும் ஏற்படலாம் எனவே இந்த செயற்படுகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஞானசார தேரர் கூறுவது போல பௌத்த மதம் என்பது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒரு மதம்.மேலும் உலகில் பல்வேறு நாடுகளில் பௌத்த மதத்தை வழிபடுகின்றார்கள்.எனவே இந்த மதம் தனியே சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமான ஒரு மதம் என்று கூற முடியாது.அது எந்த மதமாக இருந்தாலும் அதே நிலைதான்.அது இந்து மதமாக இருந்தால் என்ன முஸ்லிம் மதமாக இருந்தால் என்ன கிறிஸ்தவ மதமாக இருந்தால் என்ன ஒரு தனிப்பட்ட இனத்திற்கோ சமூகத்திற்கோ மதம் சொந்தமானது அல்ல.

இன்று மீண்டும் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு இயக்கம் உருவாகியிருக்கின்றது.இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேதமாக்கப்பட்டுள்ளது.இது மீண்டும் மகிந்த ஆட்சியை நினைவுபடுத்துகின்றது.இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது.

கடந்த கால அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே அந்த ஆட்சியை மக்கள் இரண்டு முறை ஒரம் கட்டியிருக்கின்றார்கள்.இந்த அரசாங்கமும் முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நல்லாட்சி அரசாங்கமும் பல சிக்கலக்ளை சந்திக்க வேண்டிவரும்.எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,