விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தும் இலங்கை அரசு!

இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீண்டும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    
“கடந்த புதன்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான ஐயாத்துரை குகனைக் கிளிநொச்சி இரணைமடு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டவர்கள் அவரது இல்லத்துக்குச் சென்று அவரை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத ஒரு சூழலில், அவர் ஒரு ஜனநாயக ரீதியிலான அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர் என்று தெரிந்துகொண்டு அவரது சமூக சேவையை தடுத்து நிறுத்தும் வகையிலும், அவரை அச்சுறுத்தும் வகையிலும் புலனாய்வுப் பிரிவினர் நடந்துகொண்டமை கண்டிக்கத்தக்கது.

பொலிஸாரோ அல்லது அவர்களது புலனாய்வுப் பிரிவினரோ ஒருவர் மீது குற்றச்சாட்டு இருக்கும் பட்சத்தில் விசாரிப்பது இயல்பானது. அது அவர்களது கடமையும் கூட. ஆனால், எத்தகைய குற்றச்சாட்டும் இல்லாமல் விசாரணைக்குட்படுத்துவதென்பது அவரையும் அவரது குடும்பத்தையும்,அவரது ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகளையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது.

எமது கட்சி உறுப்பினரான ஐயாத்துரை குகனுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு அரசும் பொலிஸாரும் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமது ஐந்து நட்சத்திர ஜனநாயகம் பற்றி வக்காளத்து வாங்கி வாய்கிழியப் பேசுபவர்கள் நடைமுறையில் அரசியல் கட்சிகளையும் அவர்களது உறுப்பினர்களையும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தும் செயற்பாடு மீண்டும் தொடங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

அதனைப் போன்றே ஒருபுறம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தப்போகின்றோம் என்று வீரமுழக்கம் இடும் அமைச்சர்கள் மறுபுறத்தில் இத்தகைய ஜனநாயக விரோத செயற்பாடுகளில் இறங்குவதானது கண்டனத்துக்குரிய செயற்பாடாகும்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களைத் தனிநாடு கோரி ஆயுதம் ஏந்த வைத்தது இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களே. உள்ளங்கை புண்ணுக்கு இதயத்தில் மேற்கொண்ட சத்திர சிகிச்சையின் பயனை நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.

நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலையின் காரணமாக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தொழிற்சங்கங்களும் வீதியில் இறங்கிப் போராடும் சூழலில், மக்களை பிளவு படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு மக்களின் மீது அடக்குமுறையையும், அச்சுறுத்தலையும் ஏவிவிடுவதானது நாட்டின் சுபீட்சத்துக்கு எந்தவகையிலும் பலனளிக்காது.

இலங்கை அரசு இத்தகைய தான்தோன்றித்தனமான – கண்டனத்துக்குரிய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை உடன் நிறுத்தி மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும் என்று நாம் கோருகின்றோம். இனியாவது சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெறுவதற்கு இந்த அரசு முயற்சிகளை மேற்கொள்வது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!