விகாரைக்கு காணி அபகரிக்கும் முயற்சிக்கு எதிராக பேரணி!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் 64ம் கட்டை மலையில் அமைக்கப்பட உள்ள பௌத்த விகாரைக்கு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நேற்று நடைபெற்றது.

“காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முழுமையாக கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும், எங்கள் காணிகளுக்குள் விவசாயம் செய்ய எங்களிடம் வாடகை கோறாதே, மூதூர் சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள-பௌத்த காலனியாக்குவதை உடன் நிறுத்து” என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன், “எங்கள் நிலம் எமக்கு வேண்டும், மாற்று காணி வேண்டாம் சொந்த நிலம் எமக்கு வேண்டும்,

காவல்துறையே அப்பாவி பொது மக்களின் காணிகளை அபகரிக்கும் அநீதிக்கு துணை போகாதே, அதிகாரங்களையும் அதிகாரிகளையும் வைத்து மக்களை விரட்டாதே, மூதூர் முஸ்லிம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை நிறுத்துங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது மூதூர் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக ஆரம்பித்து ஊர்வலமாக சென்று மூதூர் பிரதேச செயலகம் முன்றலில் நிறைவுற்றது அதனைத் தொடர்ந்து காணி அபகரிப்பு தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையுடன் கிராம மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் மூதூர் வாழ் மக்கள், இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!