கொழும்பிற்கு வந்த அச்சம்: இலங்கைக்கே விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை!

இயற்கை வடிவில் மக்களுக்கு மரணங்கள் வந்து சேர்வது யார் குற்றமும் ஆகாது. அதற்கு பொறுப்பு கூறுவதற்கும் எவருக்கும் உரிமையில்லை என்பது நியாயமானது மட்டுமல்ல ஏற்றுக் கொள்ளக் கூடியது.

ஆனால் செயற்கை வடிவில் ஏற்படும் விபத்துகளுக்கு இயற்கையை காரணம் காட்டி தப்பிக் கொள்ள நினைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

ஒவ்வோர் அனர்த்தத்திற்கும், அனர்த்தங்களுக்கும் காரணங்களும் உண்டு. பல செயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் மரணங்கள் திட்டமிட்ட கொலைகள் என்றே கூற முடியும்.

நேற்றைய தினம் வெள்ளவத்தையில் ஓர் கட்டடம் இடிந்து வீழ்ந்த சம்பவம், பாரிய அசு்சுறுத்தலை ஏற்படுத்தி கொழும்பு வாழ் மக்களுக்கு அச்சம் கலந்த மனநிலையை ஏற்படுத்திப் போனது.

இதற்கு பொறுப்பு கூறவேண்டியது யார்? இந்தக் கேள்விக்கான பதிலை ஆள் காட்டி விரல் அடுத்தடுத்து ஒருவர் மாறி ஒருவரை சுட்டிக்காட்டும் என்பது நிச்சயம்.

கட்டட விபத்தினை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வெள்ளவத்தை அனர்த்தம் இலங்கைக்கு அடித்துள்ள ஆரம்ப அபாய மணி என்பதே உண்மை.

ஒரு கட்டடம் சரிந்தமைக்கு இத்தனை பீடிகையா? என்று இப்போது நினைக்கக் கூடும். ஆனால் இதன் பாதிப்பு இப்போது எத்தகையது என்பது எமக்கு புதிதாக இருந்தாலும் உலகத்திற்கு புதிதல்ல.

2013ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஓர் கட்டடம் சரிந்தது. அதில் 1129 பேர் பரிதாபமாக இறந்தனர், 2515இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோன்று 1995இல் தென் கொரியாவில் 502 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2013ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ராவில் 18 மழலைகள் உட்பட 74 பேரின் உயிர் காவு கொல்லப்பட்டதும் கட்டடம் சரிந்தே. உலகம் முழுவதும் இந்த கட்டடங்கள் இடிந்து வீழ்கின்றமையினால் இழப்புகள் ஏராளம் பதிவாகி உள்ளன.

2006 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் (பாரிய அளவில் பதிவு செய்யப்பட்டவை மட்டும்) இடம் பெற்ற கட்டட அனர்த்தங்களினால், 2094 இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர், 4229 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர், இவை தவிர இழப்புகள் ஏராளம்.

இவை அனைத்திற்கும் காரணம் என்ன? இந்த மரணங்கள் அனைத்துமே கொலைக்குற்றமாகவே நோக்கப்பட வேண்டும். அடித்தளம் நிலையில்லாததால் ஏற்பட்ட விபத்து என்று இவற்றினை எவ்வாறு ஒதுக்குவது?

குத்தி, வெட்டி, கொன்றால் மட்டுமே அது கொலையா? ஆசைகளினாலும் பண மோகத்தினாலும் செய்யப்பட்ட கொலைகள் என்றே இந்த கட்டட அனர்த்தங்களுக்கு பெயர் கொடுக்க முடியும்.

முறைகேடாக கட்டுமானத்தினாலேயே இவை ஏற்பட்டன என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அதற்கான தண்டிப்புகளும், இழப்பீடுகளும் குறைவே.

இலங்கையில் கட்டட சரிவுகள் ஏற்பட்டதான பதிவுகள் குறைவு, என்றாலும் அனர்த்தம் ஏற்படக் கூடும் எனக் கூறி கைவிடப்பட்ட கட்டடங்கள் ஏராளம். அப்படி என்றால் அவற்றிட்கு அனுமதி கொடுத்தவர் யார்?

நேற்று வெள்ளவத்தையில் ஏற்பட்ட கட்டட சரிவு முறைகேடான வகையில், பொறுத்தமற்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணியினால் ஏற்பட்டதே என்பது தெளிவாக தெரியும். ஆனால் அடுத்து என்ன செய்யப் போகின்றார்கள்.

திட்டமிடப்பட்ட கட்டுமானம் சரிந்து வீழ்வதோ அல்லது, இடிந்து போவதோ சாத்தியமற்றது என்பதே உண்மை. ஆனால் சிறியதோர் இடத்தில் அடுக்கடுக்காக மாடிகளை உயர்த்திக் கொண்டே போனால் அதன் விளைவு தானாக தரைமட்டமாவதே.

கொழும்பில் அண்மைக்காலமாக தொடர்மாடிகள் கட்டப்பட்டுக் கொண்டே போகின்றன. ஆனால் அவை சரியான இடத்தில், சரியான அத்திவாரத்தில், தாக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது இப்போது தெரியாது இடிந்து வீழ்ந்த பின்னரே தெரியவரும்.

அப்போது கட்டடத்தை அமைத்தவர்களுக்கும், அனுமதி கொடுத்தவர்களுக்கும் தண்டிப்பு கொடுப்போம், கைது செய்வோம் என்று வீரம் பேசுவதால் என்ன பயன் இறந்தவர்கள் மீளப்போகின்றார்களா?

கொழும்பில் மட்டுமல்ல இலங்கை முழுதும் இவ்வாறு வானுயர்ந்த கட்டடங்கள் உயர்ந்து கொண்டே போகின்றது. ஆனால் அவை சரியாக கட்டப்படுகின்றதா? என்பது கேள்விக்குறி.

இலங்கையை பொறுத்த வரைக்கும் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் ஓர் சட்டம், நடுத்தரத்திற்கு ஓர் சட்டம், ஏழைக்கு ஓர் சட்டம் என்பதே நடப்பில் இருக்கின்றது. இது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உதாரணமாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் வருடங்கள் பல சேர்த்த பணத்தில் சிறியதோர் கட்டடத்தை அமைக்க வேண்டும் என்றால் கணக்கற்ற சட்ட அனுமதிகள், பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தன் கட்டடத்திற்கு அனுமதி பெற்று முடிக்கும்போது பணம் படைத்தவர் ஒருவர் 20 மாடிகளையும் கட்டி முடித்திருப்பார்.

இது எவ்வாறு சாத்தியம்? ஒற்றை பதில் ஊழல். இந்த நிலை எப்போது மாற்றம் பெறப்போகின்றது என்பதற்கு மட்டும் இப்போது பதில் இல்லை.

அதிகாரம் இருக்கும் ஒருவரின் தேவைகளை நிறைவேற்றும் போது அந்த அதிகாரம் அனுமதியைக் கொடுக்கும் என்ற நிலை ஏற்பட்டுப் போனது.

அதனால் எவரோ செய்த பாவம் எவர் தலையிலோ வந்து வீழ்கின்ற நிலைதான் இன்று ஏற்பட்டுள்ளது. இலாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வியாபாரத்தை மட்டும் பார்க்கும் அரசியல்வாதிகளால் தான் இந்த நிலை உருவாக்கப்படுகின்றது.

ஓர் கட்டடம் அமைக்கப்படும் முன்னர் அதன் நிர்மாணிப்பு, கட்டப்பட வேண்டிய முறை, போன்ற அனைத்தும் முறையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அதற்கான அனுமதி கொடுக்கப்படும்.

அப்படி சரியான சோதனையின் பின்னர் அனுமதி வழங்கப்படுமாயின் எவ்வாறு கட்டடம் இடிந்து விழும். இந்த இடத்தில் இன்னுமோர் விடயத்தினை நினைவுபடுத்த வேண்டும்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட ஓர் கட்டடத்தில், அதற்கு மேல் மாடிகளை எழுப்பவேண்டும் என்றாலும் அதற்கான அனுமதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருக்கின்றது.

இதன் போது மேலதிகமாக கட்டப்படும் மாடிகளை அந்த கட்டடம் தாங்குமா என்பதும் சோதிக்கப்பட்ட பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும்.

ஆனால் இது முறையாக நடைபெறுகின்றதா? ஆக மொத்தம் எப்போது அடுக்கு மாடி இடிந்து போகும் என்ற மன நிலையை உண்டாக்கி விட்டது ஒற்றைக் கட்டடம் சரிந்ததனால்.

அப்படியாயின் இதற்கான தீர்வுதான் என்ன? அடுக்கு மாடியே கட்டாமல் இருக்க வேண்டும் என்பதா என்ற பார்வை ஏற்படும்.

தீர்வு அதுவல்ல இப்போது கட்டப்படும் அல்லது கட்டப்பட்ட கட்டடங்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என சோதனைச் செய்யப்பட வேண்டும். சதுப்பு நிலப்பகுதிகளில் உள்ள கட்டடங்கள் ஆபத்து என்பதை அறிந்த விடயம்.

ஆனால் அதற்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரணமாக மேற்குலக நாடுகளிடம் ஓர் திட்டம் உண்டு அதாவது தரமற்ற கட்டடங்களை அரசே தகர்த்து விட்டு, வேண்டுமானால் தரமாக மீண்டும் அதே இடத்தில் கட்டடத்தை எழுப்பிக் கொள்ள வேண்டும் எனக் கூறப்படும்.

அதே வகையில் ஓர் கடுமையான திட்டத்தினை அரசு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பது சந்தேகமே.

தரமற்ற கட்டத்தை அமைத்தாலும் பரவாயில்லை தனக்கு இலாபம் வந்தால் போதும் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இலங்கையில் பஞ்சம் இல்லை.

அதேபோல் தொட்டது அனைத்திற்கும் அரசை குறை கூறுவது பொறுத்தமற்றது என்பதும் கூட ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. ஆனால் அரசு மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களுக்கு அப்பாவிகள் பாதிக்கப்பட வேண்டுமா?

இப்போது ஓர் கட்டடம் சரிந்து வீழ்ந்த பின்னர், கடந்த காலத்தில் அனுமதி கொடுத்தவர்களை கை நீட்டுவதால் கிடைக்கப்போவது என்ன? தெளிவான பதில் இது மக்களை ஏமாற்றும் செயல் என்பது மட்டுமே.

அண்மையில் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தது அதற்கு காரணம் யார்? இப்போதைய அரசு அதற்கு முன்னர் அரசை கை நீட்டியது. அப்போதைய அரசு இப்போதைய அரசை குற்றம் சுமத்தியது.

இருவரும் மாறி மாறி வாய்ச் சண்டை போட்டுக் கொண்டார்கள், பாதிக்கப்பட்டவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். அதற்கடுத்து நடந்தது என்ன?

எவர் மீதும் குற்றம் இல்லை என்ற வகையில் ஏதேதோ திட்டங்கள் கூறி சண்டை போட்டுக் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அதே நிலைதான் இன்றும்.

கட்டடம் ஒன்று வீழ்ந்த பின்னர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றது. ஆனால் தீர்வு தான் என்ன? அதற்கு விடையில்லை அடுத்தடுத்து கட்டடங்கள் சரிந்தாலும் இதே நிலைதான்.

எது எவ்வாறாயிலும் இப்போது ஒரு கட்டடம் வீழ்ந்து ஓர் எச்சரிக்கையினை விடுத்து விட்டுப் போயிருக்கின்றது. இதில் ஒருவர் மரணமடைந்துள்ளார் மன்னிக்கவும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதனைச் செய்தவர்கள் முறைகேடான கட்டடத்தை கட்டியவர்கள், அனுமதி கொடுத்தவர்கள் அனைவரும் சேர்ந்தே.

அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை அடுத்து இவ்வாறு ஓர் தரமற்ற கட்டடத்தை கட்ட நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பது ஒரு புறம்.

ஆனால் இதே போன்று அபாயத்தில் உள்ள கட்டடங்கள் எத்தனை? வானுயர்ந்த கட்டடங்களில் ஆயுள் எத்தனை வருடங்கள்? அனைத்தும் தரமாக இருக்கின்றதா? என முழுவதுமாக சோதனை செய்யப்பட வேண்டும்.

இப்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை சாதாரணமான எடுத்துக் கொண்டு விட்டுவிடப்படுமானால் அதனால் எதிர்காலத்தில் பாதிப்புகள் மிக அதிகம்.

அதேபோன்று இனி எழுப்பப்படும் கட்டடங்களுக்கு முறையான அனுமதியை வழங்குவதோடு அதன் மீது அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிடின் காலப்போக்கில் கட்டடங்களும் மனித உயிர்களுக்கு எமனாக மாறிப்போகும் என்பது நிச்சயம்.

Tags: